Published : 14 Nov 2015 04:17 PM
Last Updated : 14 Nov 2015 04:17 PM
மியான்மர் நாடாளுமன்றத் தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளது.
மியான்மர் நாடாளுமன்றத்தின் கீழவையில் 440 இடங்களும் மேலவையில் 224 இடங்களும் உள்ளன. அங்கு கடந்த 8-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் கடந்த சில நாட்களாக படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்றைய நிலவரப்படி 85 சதவீத இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் கீழவையில் 238 இடங்களையும் மேலவையில் 110 இடங்களையும் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளது.
ராணுவ ஆதரவு பெற்ற ஆளும் ஐக்கிய ஒருமைப்பாடு, மேம்பாட்டு கட்சிக்கு கீழவையில் 28 இடங்களும் மேலவையில் 12 இடங்களும் கிடைத்துள்ளன. இதர சிறிய கட்சிகள் கீழவையில் 31 இடங்களையும் மேலவையில் 10 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
பிப்ரவரியில் அதிபர் தேர்வு
அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் புதிய நாடாளுமன்றம் கூடுகிறது. முதலில் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி மேலவை, கீழவை சேர்த்து மொத்தம் 338 இடங்களைப் பெற்றிருப்பதால் அந்த கட்சியை சேர்ந்தவரே புதிய அதிபராக பொறுப்பேற்பார்.
சூச்சி அதிபராக முடியாது
கடந்த 2008-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி வெளிநாட்டு குடியுரிமை பெற்ற குடும்பத்தினர் யாரும் மியான்மரில் அதிபராக முடியாது. ஆங் சான் சூச்சியின் கணவர் பிரிட்டனைச் சேர்ந்தவர். அவரது 2 மகன்களும் பிரிஷ்டிஷ் குடியுரிமையைப் பெற்றுள்ளனர். அதன்படி ஆங் சான் சூச்சி மியான்மரின் அதிபராக முடியாது.
சர்ச்சைக்குரிய சட்டத்தை மாற்றுவதும் கடினம். எந்தவொரு சட்டத்தையும் தனது வீட்டோ அதிகாரம் மூலம் ராணுவத்தால் ரத்து செய்ய முடியும். முக்கிய இலாகாக் களும் ராணுவத்தின் வசமே இருக் கும். எனவே ராணுவ நிர்வாகத்தோடு இணைந்தே தேசிய ஜனநாயக லீக் ஆட்சி நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT