Published : 03 Apr 2021 03:13 AM
Last Updated : 03 Apr 2021 03:13 AM
தைவானில் பயணிகள் ரயில் நேற்று தடம் புரண்டதில் 48 பேர் உயிரிழந்தனர். 66 பேர் படுகாயமடைந்தனர்.
தைவானின் தைபே நகரிலிருந்து நேற்று அதிகாலையில் தாய்டூங் நகருக்கு 350 பயணிகளுடன் ஒரு ரயில் சென்று கொண்டிருந்தது. ஹுவாலெய்ன் பகுதியில் உள்ள சுரங்கப் பாதையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தபோது இந்த ரயில் தடம் புரண்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர் அங்கு உடனடியாக சென்று, ரயிலில் இருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த கோர விபத்தில் 48 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட66 பேர் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. ரயிலின் பின்பகுதியில் உள்ள பெட்டிகளுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படாததால், அவற்றில் இருந்த பயணிகள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சுரங்கப் பாதையில் பராமரிப்புப் பணிக்காக, மேடான பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரி ஒன்று, அங்கிருந்து இறங்கி தண்டவாளம் அருகே வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த ரயில், அந்த லாரியின் மீது மோதி தடம்புரண்டதாக போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, கவனக்குறைவாக லாரியை நிறுத்திய ஓட்டுநர், சுரங்கப் பாதை பராமரிப்பு அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே, இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அதிபர் ஸய் இங் வென் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும் காயமடைந் தோருக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT