Published : 29 Mar 2021 04:29 PM
Last Updated : 29 Mar 2021 04:29 PM

மியான்மர் ராணுவத்தின் தாக்குதல் மூர்க்கத்தனமானது: ஜோ பைடன் விமர்சனம்

போராட்டக்காரர்களுக்கு எதிரான மியான்மர் ராணுவத்தின் நடவடிக்கை மிகவும் மூர்க்கத்தமானது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்துள்ளார்.

மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது.

இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்துவந்த நிலையில் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் அண்மையில் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.

மேலும், ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. மியான்மர் நாட்டில் தற்போது அந்நாட்டு ராணுவம் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தை அடக்க அந்நாட்டு ராணுவம் துப்பாக்கிச் சூடு, கண்ணீர் புகை குண்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி வருகிறது. 300க்கும் மேற்பட்ட மியான்மர் நாட்டுக் குடிமக்களை ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது.

இந்நிலையில் யாங்கூன் உட்பட முக்கிய நகரங்களில் மக்கள் ராணுவத்திற்கு எதிராகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தினர். பல இடங்களில் மக்கள் தன்னெழுச்சியாகப் போராடினர். சில இடங்ளில் தீ வைப்புச் சம்வங்களும் நடைபெற்றன. 40க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் போராட்டங்கள் நடைபெற்றன.

போராட்டத்தை நசுக்குவதற்காக ராணுவமும் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 114 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் மியான்மர் ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜோ பைடன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், “இது மிகவும் துயரமானது. முற்றிலும் மூர்க்கத்தனமானது. எனக்குக் கிடைத்த அறிக்கையின் அடிப்படையில் பார்க்கையில் அப்பாவியான மக்கள் எந்தத் தேவையும் இல்லாமல் கொல்லப்பட்டுள்ளனர்” என்று விமர்சித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x