Published : 27 Mar 2021 12:06 PM
Last Updated : 27 Mar 2021 12:06 PM
வங்க தேசத்துக்குப் பிரதமர் மோடி வருகை தந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் நடத்திய போராட்டத்தில், போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் மோதல் நடந்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்க தேசத்தின் 50-வது ஆண்டு சுதந்திர தின விழாவுக்கு அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசினா அழைப்பின் பேரில் 2 நாள் பயணமாகப் பிரதமர் மோடி அந்த நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் வங்க தேசத்துக்கு பிரதமர் மோடியை அழைத்ததற்கு ஹிபாசத் இ இஸ்லாம் எனும் இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பிரதமர் ஹசினாவையும் கடுமையாக விமர்சித்து வந்தனர். இதனால், வங்க தேசத்தில் பல்வேறு நகரங்களில் கடந்த சில வாரங்களாகவே பிரதமர் மோடி வருகைக்கு எதிராகத் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
வங்க தேசத்துக்கு நேற்று பிரதமர் மோடி வந்ததையடுத்து, தென்கிழக்கு மாவட்டமான சட்டகிராம் நகரில் உள்ள மதராஸாவைச் சேர்ந்த ஏராளமானோர் திரண்டு வந்து சாலையில் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டக்காரர்களைக் கலைந்து செல்லுமாறு போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், போலீஸார் மீது திடீரெனத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து போலீஸார் நடத்திய தடியடியில் 4 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து சட்டோகிராம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் போலீஸ் அதிகாரி அலாவுதீன் தாலுக்தர் கூறுகையில், "ஹிபாசத் இ இஸ்லாம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் போலீஸார் வருவதற்கு முன் அரசு கட்டிடங்கள், காவல் நிலையம், பொதுச் சொத்துகள் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். அப்போது அங்கு போலீஸார் அங்கு சென்றபோது அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் 5 பேர் காயமடைந்தனர். இவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் 4 பேர் உயிரிழந்தனர்" எனத் தெரிவித்தார்.
இது தவிர டாக்கா நகரின் பிரதான மசூதி அருகே போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே நடந்த மோதலில் கூட்டத்தினரைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, ரப்பர் புல்லட்டுகளால் சுட்டனர். இதில் ஏராளமானோர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தவிர பிரம்மன்பாரியா மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்துக்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்துவிட்டுத் தப்பினர். இதனால் ரயில் போக்குவரத்து சில மணி நேரம் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT