Published : 20 Mar 2021 03:14 AM
Last Updated : 20 Mar 2021 03:14 AM
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கயூகா ஏரியில் மூழ்கி உயிருக்குப் போராடிய முதியவரை சென்னை இளைஞர் அஞ்சன் மணி (19) மேலும் சிலருடன் இணைந்து காப்பாற்றியுள்ளார். இணையதளத்தில் பரவலாகிய இந்த செய்தியை பார்த்த பலரும் இளைஞரின் செயலை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
சென்னையில் பிறந்து வளர்ந்தவர் அஞ்சன் மணி. இவர், டிவிஎஸ் அண்ட் சன்ஸ் நிறுவனத் தலைவர் சுரேஷ் கிருஷ்ணாவின் மகள் ஆர்த்தி கிருஷ்ணா மற்றும் டாக்டர் மணி சாக்கோ தம்பதியரின் மகன். சுந்தரம் ஃபாஸ்டனர்ஸின் நிர்வாக இயக்குநர் ஆர்த்தி கிருஷ்ணா. சென்னையில் பள்ளிப் படிப்பை முடித்த அஞ்சன் மணி நியூயார்க் நகரில் உள்ள கார்னல் எஸ்சி ஜான்சன் வணிகக் கல்லூரியில் பொருளாதாரம் மற்றும் மேலாண்மை இளநிலை பட்டப்படிப்பை படித்து வருகிறார்.
இது குறித்து, இந்து தமிழ் திசையிடம் பேசிய அஞ்சன் மணி, ``விடுமுறை நாளன்று. வழக்கத்தைவிடவும் அன்று குளிர் குறைவாக இருக்கிறதே என்றுதான் நானும் நண்பன் ஃபிலிப்பும் சுற்றுலா சென்றோம். அப்போது, மீன் பிடித்துக் கொண்டிருந்த முதியவர் ஏரியில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாகக் கூக்குரல் கேட்டு விரைந்தோம். ஏரிக்குள் இருந்த ஏணி வழியாக முதியவரை மேலே அழைத்து வந்துவிடலாம் என ஃபிலிப் முதலில் நீருக்குள் இறங்கினார். நான் முதியவரின் கைகளை பிடித்து நீரில் இருந்து மீட்க முயன்றேன். ஆனால், தண்ணீருக்குள் மூழ்கி நெடு நேரமாகி விட்டதால் முதியவர் மிகவும் சோர்வடைந்துவிட்டார். ஃபிலிப்புக்கோ ஏற்கெனவே கையில் காயம். அதனால், உடல் பருமனான அந்த முதிய வரை தூக்கிச் சுமக்கும் வலு ஃபிலிப்புக்கு இல்லை. அவரை பிடித்து இழுக்கும் முயற்சியில் தவறி ஃபிலிப்பும் ஏரிக்குள் விழுந்து விட்டார். இந்நிலையில் பூங்காவுக்குச் சுற்றுலா வந்திருந்த இளைஞர் அலெக்சாண்டர் சங்கும் நானும் ஏரிக்குள் குதித்தோம்.
உறைய வைக்கும் குளிர் நீரிலும் எப்படியாவது முதியவரைக் காப்பாற்றும் எண்ணம் மட்டுமே இருந்தது. நானும் அலெக்சாண்ட ரும் முதியவரின் தோளை பிடித்து அவரை மீட்டுக் கரை சேர்த்தோம். அங்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் பணியாளர்களின் உதவியோடு முதியவரை காப்பாற்ற முடிந்தது. காவல் துறையினரும் வந்து எங்களைக் கம்பளியால் போர்த்தி அழைத்துச் சென்று கைகுலுக்கி வாழ்த்தினார்கள். முகம் தெரியாத மனிதர் என்றாலும் ஒரு உயிரைக் காப்பாற்றும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது மனநிறைவைத் தருகிறது” என்றார்.
தங்களது உயிரையும் பொருட் படுத்தாமல் முதியவரின் உயிரை மீட்ட அஞ்சன் மணி உள்ளிட்ட 3 இளைஞர்களின் மனிதநேயத் திற்கும் வீரதீரச் செயலுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT