Published : 28 Nov 2015 09:28 AM
Last Updated : 28 Nov 2015 09:28 AM
பாரீஸ் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் அகதிகளை தடுத்து நிறுத்தி விரட்டுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
உள்நாட்டுப் போர் நடைபெறும் சிரியா, இராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
கடல்மார்க்கமாக துருக்கி மற்றும் கிரேக்கத்தின் தீவுப் பகுதிகளில் கரையேறும் அகதிகள் அங்கிருந்து தரைவழியாக ஆஸ்திரியா, ஜெர்மனி நாடுகளுக்கு செல்கின்றனர். இந்த ஆண்டில் இதுவரை 8.5 லட்சம் அகதிகள் ஐரோப்பாவில் அகதிகளாக குடியேறி உள்ளனர். இதில் மூன்றில் இரண்டு பங்கு அகதிகளுக்கு ஜெர்மனி அடைக்கலம் அளித்துள்ளது.
இந்நிலையில் கடந்த 13-ம் தேதி இரவு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்களில் 130 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அகதிகள் போர்வையில் பாரீஸ் நகருக்குள் ஊடுருவி இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அகதிகள் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் கெடுபிடியை கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டன.
பால்கன் நாடுகளான அல்பேனியா, மேசிடோனியா, பல்கேரியா, ருமேனியா, செர்பியா ஆகிய நாடுகள் தங்கள் நாட்டு எல்லையை மூடிவிட்டன. கிரேக்க தீவுகளில் கரையேறிய அகதிகள் தாங்கள் விரும்பும் ஐரோப்பிய நாடுகளுக்கு மேசிடோனியா வழியாக செல்ல கடந்த ஒரு மாதமாக காத்திருக்கின்றனர்.
ஆனால் அவர்களை மேசிடோனியா போலீஸாரும் ராணுவ வீரர்களும் எல்லையில் முள்வேலி அமைத்து தடுத்து நிறுத்தியுள்ளனர். இப்போதைய நிலையில் கிரேக்கத்தின் வடக்குப் பகுதி கிராமமான இடோமேனியில் சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் ஒரு மாதமாக குளிர், மழையில் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் அகதிகளுக்கும் மேசிடோனியா பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. முள்வேலியை வெட்டிவிட்டு மேசிடோனியா எல்லைக்குள் செல்ல அகதிகள் முயன்றனர். அப்போது போலீஸார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தி அகதிகளை விரட்டியடித்தனர்.
இதுகுறித்து ஷபானி என்ற அகதி கூறியபோது, சிரியா, இராக், ஆப்கானிஸ்தான் அகதிகளை மேசிடோனியா ராணுவம் தடுத்து நிறுத்தியுள்ளது, நாங்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக எல்லையில் தவித்து வருகிறோம். தரையில் படுத்து, குளிர், மழையில் நனைந்து வருகிறோம். யாரும் எந்த பதிலும் சொல்வதில்லை என்று வேதனையுடன் கூறினார்.
இதேபோல ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளின் எல்லையில் நூற்றுக்கணக்கான அகதிகள் பரிதவித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT