Published : 14 Mar 2021 11:53 AM
Last Updated : 14 Mar 2021 11:53 AM
இலங்கையில் பெண்கள் புர்கா அணியத் தடை விதிக்க முடிவு செய்துள்ள அந்நாட்டு அரசு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதரஸாக்களையும் மூடவும் முடிவு செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2019-ம் ஆண்டு இலங்கையில் கொழும்பு நகரில் தேவாலயங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 250க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்குப்பின் தற்காலிகமாக இலங்கையில் பெண்கள் முகத்தை மூடும் விதத்தில் புர்கா அணியத் தடை விதிக்கப்பட்டது. அதன்பின் விலக்கப்பட்டது. ஆனால், இப்போது நிரந்தரமாகத் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் சரத் வீரசேகரா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தீவிரவாத தடுப்புச் சட்டத்தை அதிகாரிகள் பயன்படுத்த உள்ளார்கள். ஆனால், மனித உரிமை ஆர்வலர்கள் இந்தச் சட்டம் மிகவும் கொடூரமானது என்று எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். ஆனால், மதரீதியான தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த இந்தச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும், இதன் மூலம் தீவிரவாதக் குற்றங்களில் ஈடுபடுவோர், ஆதரவு தெரிவிப்போர் ஆகியோரை 2 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க முடியும்.
பெண்கள் முகத்தை மூடும் அணியும் விதத்தில் இருக்கும் புர்கா நேரடியாக நாட்டின் பாதுகாப்புக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த புர்கா உடை சமீபத்தில்தான் இலங்கையில் பெண்கள் அணிகிறார்கள்.
ஆனால், இதற்கு முன் இலங்கையில் இருந்த முஸ்லிம்கள் யாரும் புர்கா அணிந்தது இல்லை. இது ஒருவகையான மதரீதியான தீவிரவாதத்துக்குத் துணை போவதாகவே நினைக்கிறோம். ஆதலால், விரைவில் பெண்கள் புர்கா அணியத் தடை விதிக்க முடிவு எடுப்போம்.
இதற்கான முடிவில் நான் கையொப்பமிட்டுவிட்டேன், விரைவில் கேபினெட் ஒப்புதல் கிடைத்துவிட்டால் முழுமையாகத் தடை விதிக்கப்படும். அதேபோல, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதரஸாக்கள் செயல்படவும் தடை விதிக்கப்படும். யார் வேண்டுமானாலும் பள்ளிகள் தொடங்கலாம், என்ன வேண்டுமானாலும் கற்பிக்கலாம் என்று இருப்பதையும் அனுமதிக்க முடியாது. எங்கள் நாட்டுக்கென தனியான தேசியக் கல்விக் கொள்கை இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
கடந்த 2019-ம் ஆண்டில் அதிபராக கோத்தபய ராஜபக்சே அதிபராக வந்தபின், நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும், தீவிரவாதம் தடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய விதிக்கப்பட்டிருந்த தடையில் தளர்வுகள் வழங்கப்பட்ட நிலையில், இப்போது நிரந்தரமாகத் தடை விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT