Published : 07 Mar 2021 01:31 PM
Last Updated : 07 Mar 2021 01:31 PM
இராக்கில் உள்ள முஸ்லிம் மற்றும் கிறித்தவ மதத் தலைவர்கள் பகையை ஒதுக்கி வைத்துவிட்டு அமைதி மற்றும் ஒற்றுமைக்காக ஒன்றிணைந்து செயல்படுமாறு போப் பிரான்சிஸ் கேட்டுக் கொண்டார்.
இராக் வந்தடைந்த போப் பிரான்சிஸ் அந்நாட்டின் பிரதமர் முஸ்தபா, அதிபர் பர்ஹம் சாலிஹ் ஆகியோரைச் சந்தித்தபின், இராக்கின் மூத்த ஷியா தலைவரான அயத்துல்லா அலி அல் சிஸ்தானியைச் சந்தித்தார்.
சிஸ்தானியுடனான சந்திப்பில் போப் பிரான்சிஸ், ஐஎஸ் தீவிரவாதிகளால் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து தெற்கு இராக்கில் பல்வேறு நிகழ்வுகளில் அவர் கலந்துகொண்டார்.
இந்த நிலையில் கூட்டம் ஒன்றில் போப் பிரான்சிஸ் பேசும்போது, “முஸ்லிம்கள், கிறித்தவர்கள் மற்றும் யூதர்களுக்கு பொதுவான தீர்க்கதரிசியான ஆபிரகாமின் பிள்ளைகளாக சமாதானத்திற்காக வேண்டுவோம். இங்குள்ள கிறித்தவ, இஸ்லாமிய மதத் தலைவர்கள் தங்களிடையே நிலவும் பகைமைகளை நிறுத்தி வைத்துவிட்டு அமைதிக்காகவும் ஒற்றுமைக்காகவும் இணைந்து பணியாற்ற வேண்டும். கடவுள் இரக்கமுள்ளவர். நம்முடைய சகோதர, சகோதரிகளை வெறுப்பதன் மூலம் அவருடைய பெயரைக் களங்கப்படுத்தக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
போப் பிரான்சிஸின் மூன்று நாள் சுற்றுப் பயணத்தில் இன்று ஐஎஸ் ஆதிக்கம் அதிகம் உள்ள மொசூல் நகருக்குச் சுற்றுப் பயணம் செய்ய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT