Published : 02 Mar 2021 06:44 PM
Last Updated : 02 Mar 2021 06:44 PM
அமெரிக்காவின் எந்தவிதமான பொருளாதாரத் தடைகளையும் எதிர் கொள்ள தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “ அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக எந்த ஆதாரமும் இல்லை. அலெக்ஸிக்கு கடந்த வருடம் உடல் நலம் பாதித்தத்தில் ரஷ்யாவின் பங்கு எதுவும் இல்லை. எங்கள் மீது எந்தவிதமான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தாலும் அதனை எதிர் கொள்ள தயாராக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைத்தது தொடர்பாக அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்க அமெரிக்கா தயாராகி வருகிறது.
அவ்வாறு விதித்தால் ஜோ பைடன் நிர்வாகம், ரஷ்யா மீது விதிக்கும் முதல் பொருளாதாரத் தடை இதுவாகும்.
ஜோ பைடனுக்கு முன்னர் அமெரிக்க அதிபராக இருந்த ட்ரம்ப், ரஷ்யாவுடன் நட்பு பாராட்டியே இருந்தார். மேலும், ரஷ்யாவின் மீது எந்தவிதத் தடைகளையும் அவர் விதிக்கவில்லை.
நடந்தது என்ன?
ரஷ்ய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி. கடந்த ஆகஸ்ட் மாதம் டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது அலெக்ஸி மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவர் ஜெர்மனியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதை ஜெர்மனி அரசு சமீபத்தில் உறுதிப்படுத்தியது. அவருக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக தங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதாக ஜெர்மனி தெரிவித்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா முற்றிலுமாக மறுத்தது
இந்த நிலையில் சிகிச்சைக்குப் பின் ரஷ்யா திரும்பிய அலெக்ஸி நவால்னி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT