Last Updated : 24 Nov, 2015 10:56 AM

 

Published : 24 Nov 2015 10:56 AM
Last Updated : 24 Nov 2015 10:56 AM

அடாவடி பின்னணி கொண்ட ஆஸ்திரேலியா - 9

ஆஸ்திரேலியாவின் தலைநகரம் சிட்னி என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘‘பாவம், மெல்போர்ன்தான் அந்த நாட்டின் தலைநகரம் என்பதைக்கூட அறியாத அப்பாவிகள் அவர்கள்’’ என்று இது குறித்து விமர்சிக்கும் அப்பாவிகளும் உண்டு.

இந்த இரண்டு நகரங்களில் எதுவுமே ஆஸ்திரேலியாவின் தலைநகரம் அல்ல. கான்பெர்ராவுக்குத்தான் அந்தப் பெருமை. சமீபத்தில் தனது நூறாவது பிறந்தநாளைக் கொண்டாடியது கான்பெர்ரா.

இன்றளவும் மெல்போர்ன் மக்களுக்கும், சிட்னி மக்களுக்கும் குடுமிப்பிடி சண்டை நடந்து கொண்டுதான் இருக்கிறது. தங்கள் நகரம்தான் சிறந்தது என்று அவரவரும் கூறிக் கொள்கிறார்கள். போதாக்குறைக்கு அடிலெய்டு மற்றும் ப்ரிஸ்பேன் ஆகிய நகரங்களும் தங்கள் முக்கியத்துவத்தை வெளிக்காட்ட முனைந்திருக்கின்றன.

‘‘எங்கள் உணவு வகைதான் சீப் அன்ட் பெஸ்ட். சிட்னி மக்களில் பலரும் மரியாதை தெரியாதவர்கள். நாங்கள் அப்படியல்ல. எங்கள் ரத்தத்திலேயே கலை ஊறி இருக்கிறது. டிராம் போக்குவரத்து எங்களிடம்தான் இருக்கிறது. தலைசிறந்த பல்கலைக்கழகத்தை (மெல்போர்ன் பல்கலைக்கழகம்) கொண்டிருப்பது நாங்கள்தான். உலகின் தென்பாதியில் உள்ள மாபெரும் அங்காடியான ‘Chaddy’ எங்கள் நகரில்தான் உள்ளது. உலகின் மிக உயரமான குடியிருப்புப் பகுதிகள் அமைந்த டவர் எங்களிடம் உள்ள யுரேகா டவர்தான். எங்கள் பொதுப் போக்குவரத்து மிகக் குறைவான கட்டணம் கொண்டது. உலக நீச்சல் போட்டிகள் நடைபெற்றது எங்கள் நகரத்தில்தானே. உச்சத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய நிறுவனங்களில் பத்தில் ஏழு மெல்போர்னில்தான் இருக்கின்றன’’ என்று அடுக்கும் மெல்போர்ன் நகரத்தினர் எதிர்தரப்பின் எதிர்மறை விஷயங்களையும் பட்டியலிடுகிறார்கள்.

‘‘ஆஸ்திரேலியாவின் மிக மாசடைந்த நகரம் சிட்னிதான். சிட்னிக்காரர்களுக்கு மூக்குக்கு மேல் கோபம் வரும். அந்த நகரின் டாக்ஸி ஓட்டுனர்கள்கூட கோபத்தைக் கட்டுப்படுத்தத் தெரியாதவர்கள். அங்கு போக்குவரத்து நிர்வாகம் சரியல்ல. குரோனுல்லா (Cronulla) கடற்கரைக் கலவரங்களைப் போல எங்கள் நகரத்தில் எந்த அசிங்கமும் அரங்கேறவில்லை.

துறைமுகம் ஒபேரா ஹவுஸ் ஆகிய இரண்டை விட்டால் சிட்னியில் என்ன இருக்கிறது? எங்கள் நகரின் கட்டடக்கலை பலவிதங்களிலும் ரோல் மாடல். சிட்னியின் காப்பியை மனிதன் குடிப்பானா? சிட்னியை பார்க்கச் செல்வார்கள். ஆனால் வசிப்பதற்கு மெல்போர்னைத்தான் தேர்ந்தெடுப்பார்கள்’’ என்கிறார்கள் முத்தாய்ப்பாக.

வேறு சில மெல்போர்ன் ஆதரவாளர்களோ

‘‘சிட்னியை வடிவமைத்தது கிரிமினல்கள். மெல்போர்னை வடிவமைத்தது பொறியியல் வல்லுநர்கள்’’ என்கிற அளவுக்குக்கூடச் செல்கிறார்கள்.

இதைப் படிக்கும்போது ‘அதென்ன குரோனுல்லா கலவரங்கள்?’ என்ற கேள்வி எழுந்தால் இதோ அதற்கான விளக்கம்.

டிசம்பர் 2005-ல் நடைபெற்றன அந்தச் சம்பவங்கள். குரோனுல்லா என்பது சிட்னியின் புறநகர்ப் பகுதியிலுள்ள ஒரு கடற்கரைப் பகுதி. அங்குள்ள சில உள்ளூர் சிறுமிகளிடம் லெபனானைப் பூர்வீகமாகக் கொண்ட சில ஆஸ்திரேலியர்கள் தவறாக நடந்து கொண்டார்கள் என்ற செய்தி வேகமாகப் பரவியது. (இது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்று பின்னர் தெரிய வந்தது). தவிர அங்குள்ள இரண்டு சமூக சேவகர்களும் தாக்கப்பட்டதாக ஒரு கூடுதல் செய்தி பரவியது. கடலில் யாராவது மூழ்கினால் அவர்களைக் காப்பாற்றும் சேவையை செய்ய விருப்பத்துடன் பதிவு செய்து கொண்ட சேவகர்கள் அவர்கள்.

டிசம்பர் 11 ஞாயிற்றுக்கிழமை ஐயாயிரத் துக்கும் மேற்பட்ட மக்கள் வடக்கு குரோனுல் லாவில் கூடினார்கள். அரபுகளாகத் தோற்ற மளித்த ஆண்களை அந்த ‘மண்ணின் மைந்தர்கள்’ தாக்கினார்கள். லெபனானி லிருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறி யவர்கள் பதிலுக்குத் தாக்கினார்கள்.

அப்படித் தாக்கிய குழுவைச் சேர்ந்த ஒரு 17 வயது சிறுவன் ஒருவன் ஆஸ்திரேலியக் கொடியை எரித்தான். இது பிரச்னையை மேலும் அதிகமாக்கியது. (மண்ணின் மைந்தர்கள் குழுவைச் சேர்ந்த பலரும் ஆஸ்திரேலியக் கொடி அச்சிடப்பட்ட உடைகளை அணிந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது).

காவல்துறையின் அடக்குமுறை போதிய அளவு பலனளிக்கவில்லை. பலரும் படுகாயம் அடைந்தனர். 104 பேர் மீது குற்றச் சாட்டு பதிவு செய்யப்பட்டது. பொதுச் சொத்துகளுக்கும் தனியார் சொத்துகளுக்கும் பெரும் சேதம் உண்டானது.

நல்லவேளையாக அதற்குப் பிறகு அங்கு கலவரங்கள் தொடரவில்லை. என்றாலும் அப்பகுதியில் ஓர் அமைதியின்மை தொடர்ந்து நிலவுகிறது. இதைத்தான் மெல்போர்ன்காரர் களில் சிலர் சுட்டிக் காட்டுகிறார்கள்.

சிட்னிக்காரர்கள் இதையெல்லாம் கேட்டு கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு சிரிக்கிறார்கள்.

‘‘நூறுக்கும் மேற்பட்ட அழகிய கடற்கரைகள் எங்களிடம்தான் இருக் கிறது. அற்புதமான பல தீவுகள் எங்கள் நகருக்குச் சொந்தமானது. சிற்பக்கலையின் உன்னதத்தைப் பேசும் கலை வேலைப் பாடுகள் எங்களிடம்தான் இருக்கின்றன. எங்கள் நகரத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களுமே உடற்பயிற்சியில் தேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். எங்கள் நகரின் வெப்ப நிலையும் எப்போதுமே சகித்துக் கொள்ளக் கூடியதாகத்தான் இருக்கும். உலகின் தலைசிறந்த அழகிய இடங்களிலிருந்து ஒரிரு மணி நேரத்தில் எங்கள் நகரத்துக்கு வந்துவிடலாம்’’ என்கின்றனர் சிட்னிகாரர்கள்.

ஊடகங்களில் இப்படியொரு பட்டிமன்றத்தை இந்த இரு நகரங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அது சரி, சிறந்த, புகழ்பெற்ற இந்த இரு நகரங்களில் ஒன்றுதானே ஆஸ்திரேலியா வின் தலைநகராக இருந்திருக்க வேண்டும்? பிறகு எப்படி கான்பெர்ரா நாட்டின் தலைநகரானது?

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x