Published : 26 Feb 2021 03:35 PM
Last Updated : 26 Feb 2021 03:35 PM
60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கரோனா தடுப்பூசியை அனுப்பி உதவி வரும் இந்தியப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, பிரதமர் மோடியின் உதவும் செயலை மற்ற நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்று புகழாரம் சூட்டியுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸைத் தடுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின், கோவிஷீல்ட் தடுப்பூசி போடும் பணிகள் கடந்த மாதம் 16-ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. முதல் கட்டமாக முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்குத் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் இருப்போருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையே மத்திய அரசு பல்வேறு நாடுகளுக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. அண்டை நாடுகளான இலங்கை, வங்க தேசம், நேபாளம், மொரீஷியஸ், மியான்மர் உள்ளிட்ட 60 நாடுகளுக்கு இதுவரை கரோனா தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இது தவிர ஆப்பிரிக்க நாடான கானாவுக்கு 6 லட்சம் கோவிட் தடுப்பூசிகளை நேற்று மத்திய அரசு சார்பில், யுனிசெஃப் நிறுவனத்தின் உதவியுடன் அனுப்பி வைத்துள்ளது. 92 நாடுகளுக்கு கரோனா தடுப்பூசியை வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதுவரை 229 லட்சம் டோஸ் கரோனா தடுப்பூசிகள் உலக நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 64 லட்சம் டோஸ் மருந்துகள் உதவும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளன. 165 லட்சம் டோஸ் மருந்துகள் வர்த்தக நோக்கில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை வங்க தேசத்துக்கு 20 லட்சம் டோஸ், மியான்மருக்கு 17 லட்சம், நேபாளத்துக்கு 10 லட்சம், பூட்டானுக்கு 1.5 லட்சம் டோஸ், மாலத்தீவுக்கு ஒரு லட்சம் டோஸ் கரோனா தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மொரீஷியஸுக்கு ஒரு லட்சம், செஷல்ஸுக்கு 50 ஆயிரம், இலங்கைக்கு 5 லட்சம் டோஸ், பஹ்ரைனுக்கு ஒரு லட்சம் டோஸ், ஓமனுக்கு ஒரு லட்சம் டோஸ் கரோனா தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானுக்கு 5 லட்சம் டோஸ், பர்படாஸுக்கு ஒரு லட்சம் டோஸ், டோமினிக்காவுக்கு 70 ஆயிரம் டோஸ் மருந்துகளும் அனுப்பப்பட்டுள்ளன.
வர்த்தகரீதியில் பிரேசிலுக்கு 20 லட்சம் டோஸ், மொரோக்கோவுக்கு 60 லட்சம், வங்க தேசத்துக்கு 50 லட்சம், மியான்மருக்கு 20 லட்சம், எகிப்துக்கு 50 ஆயிரம், அல்ஜீரியாவுக்கு 50 ஆயிரம், தென் ஆப்பிரிக்காவுக்கு 10 லட்சம், குவைத்துக்கு 2 லட்சம், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 2 லட்சம் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் கரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளன.
உலக அளவில் 60 நாடுகளுக்கும் கரோனா தடுப்பூசிகளை சப்ளை செய்துவரும் இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் பாராட்டு தெரிவித்து, புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், "கரோனா தடுப்பூசிகளை வழங்கிவரும் இந்தியாவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி. கோவாக்ஸின் மற்றும் கோவிட் தடுப்பூசிகளை 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வழங்கி, சுகாதாரப் பணியாளர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி முகாம்களைத் தொடங்கி வைக்கும் உங்கள் கடப்பாடு பாராட்டுக்குரியது. உங்களின் செயலை உதாரணமாக எடுத்து அனைத்து நாடுகளும் பின்பற்றுவார்கள் என நம்புகிறேன்" என கெப்ரியாசிஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT