Published : 26 Feb 2021 03:14 AM
Last Updated : 26 Feb 2021 03:14 AM
அமெரிக்காவில் கரோனா தடுப்பூசி விநியோகத்தை அதிகரிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் கடந்த 23-ம் தேதி வாஷிங்டனில் நடைபெற்றது. அமெரிக்க நாடாளுமன்ற சிறப்பு குழு நடத்திய கூட்டத்தில், பைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன், அஸ்ட்ரா ஜெனிகா, நோவாவேக்ஸ் ஆகிய மருந்து உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அப்போது வரும் ஜூலை மாதத்துக்குள் அமெரிக்காவுக்கு 110 கோடி கரோனா தடுப்பூசிகளை விநியோகிக்க மருந்து உற்பத்தி நிறுவனங்கள் உறுதி அளித்தன.
ஆலோசனை கூட்டத்தில் பிரிட்டன்-சுவீடன் நிறுவனமான அஸ்ட்ரா ஜெனிகாவின் தலைவர் ரட் டாபர் கூறியதாவது:
அமெரிக்கா மட்டுமன்றி உலகம் முழுவதும் எங்களது கரோனா தடுப்பூசிகளை விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்காக இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறோம். அந்த நிறுவனத்தின் புனே ஆலையில் இருந்து 145 நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகளை அனுப்ப திட்டமிட் டுள்ளோம். இதன்படி அடுத்த 6 மாதங்களில் இந்தியாவில் இருந்து 30 கோடி கரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வோம். வருவாய் குறைந்த, நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கு அதிக அளவில் தடுப்பூசிகள் அனுப்பப் படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நோவாவேக்ஸ் நிறுவன துணைத் தலைவர் ஜான் கூறும்போது, "எங்களது கரோனா தடுப்பூசிகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறோம். இந்திய, அமெரிக்க ஆலைகள் மூலம் எங்களால் மாதத்துக்கு 1.5 கோடி கரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய முடியும். எங்களது தடுப்பூசி உற்பத்திக்கு சீரம் நிறுவனத்தை அதிகமாக நம்பியுள்ளோம்" என்று தெரிவித்தார்.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், புனேவின் மன்ஜிரி பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் சீரம் இன்ஸ்டிடியூட் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT