Published : 25 Feb 2021 07:15 PM
Last Updated : 25 Feb 2021 07:15 PM
எல்லையில் அத்துமீறித் தாக்குதலைத் நிறுத்துதல் உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் தீவிரமாக கடைப்பிடிக்கவும், இருதரப்பு இடையிலான முக்கியப் பிரச்சினைகளைத் தீர்க்கவும் இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் முடிவாகியுள்ளது.
குறிப்பாக எல்லையில் அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல், வன்முறையைத் தூண்டுதல் நடவடிக்கைகளையும் அடையாளம் காணவும் இருதரப்பும் முடிவு செய்துள்ளன.
இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ராணுவ செயல் இயக்குநர்கள் (டிஜிஎம்ஓ)அளவில் நடந்த பேச்சு வார்த்தையில் இந்த ஒப்பந்தம் முடிவாகியுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பதான்கோட் விமானப்படைத் தளத்தில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமடைந்தது. அதைத்தொடர்ந்து காஷ்மீரின் உரி ராணுவ முகாம் மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து, புல்வாமா தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர், அதற்குப்பதிலடியாக இந்திய ராணுவம் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்களை அழித்தது. கடந்த 2019-ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு உரிமையை மத்திய அரசு நீக்கியபின் பாகிஸ்தானுடனான இந்திய உறவு மேலும் மோசமடைந்தது.
இந்த சூழலில் இரு தரப்பு நாடுகளுக்கும் இடையே இந்த ஒப்பந்தம் முடிவாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் அனைத்தும் இன்று இரவு முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானும், மத்திய அரசும் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
இரு தரப்பு நாடுகளும் எல்லைக் கட்டுப்பாட்டுப்பகுதி உள்ளிட்ட மற்ற பகுதிகளில் சுதந்திரமான, வெளிப்படையான, நல்ல சூழல் நிலவ வேண்டும் எனும் நோக்கில் ஆய்வு செய்தோம்.
எல்லையில் பரஸ்பர அமைதியும், இருதரப்புக்கும் நன்மை ஏற்படும் நோக்கில் , இரு தரப்பு ராணுவ செயல் இயக்குநர்களும், சேர்ந்து, வன்முறைக்கு வித்திடும், அமைதியைக் குலைக்கும் முக்கியப்பிரச்சினைகள், கவலைக்குரிய விஷயங்களைத் தீர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது
இரு தரப்பு நாடுகளும் அனைத்து ஒப்பந்தங்களையும், புரிந்துணர்வுகளையும், போர்நிறுத்த ஒப்பந்தங்களையும் தீவிரமாகக் கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 25-ம்தேதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும்.
இரு தரப்பு நாடுகளுக்கு இடையே ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் ஹாட்லைன் தகவல்தொடர்பு, கொடி அணிவகுப்பு கூட்டம் ஆகியவற்றின் மூலம் அசம்பாவிதமான சூழல்களையும், தவறான புரிதல் சூழலையும் தீர்க்க பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்த தகவலின்படி, கடந்த ஆண்டில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் 5,133 முறை அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதன்மூலம் 46 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் ஜனவரி 28-ம் தேதிவரை 299 முறைப் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT