Published : 23 Feb 2021 08:20 AM
Last Updated : 23 Feb 2021 08:20 AM
அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது. 2-ம் உலகப் போரில் அமெரிக்காவில் உயிரிழந்த மக்களுக்கு மேல் கரோனாவில் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
2-ம் உலகப்போரில் அமெரிக்காவில் 4.05 லட்சம் பேர் உயிரிழந்தனர். வியட்நாம் போரில் 58 ஆயிரம் பேரும், கொரியப் போரில் 36 ஆயிரம் பேரும் உயிரிழந்தனர். இதைவிட கரோனாவில் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. வேர்ல்டோ மீட்டர் கணக்கின்படி அமெரிக்காவில் கரோனாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 12 ஆயிரத்து 590 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் கரோனா உயிரிழப்பு அதிகரித்துள்ளதை அடுத்து, அதிபர் ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார். அடுத்த 5 நாட்களுக்கு அமெரிக்க தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடவும் உத்தரவிட்டுள்ளார்.
கரோனா உயிரிழப்பு குறித்து அதிபர் பைடன் கூறுகையில், "கரோனா உயிரிழப்பைத் தடுக்க மிகவும் முயன்று வருகிறோம். இருப்பினும் உயிரிழப்பு அதிகரித்துள்ளது வேதனையாக இருக்கிறது. ஒவ்வொருவரின் உயிரும் காக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.
அமெரிக்காவில் கடந்த டிசம்பர் மாதம்தான் கரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் தொடங்கியுள்ளன. தடுப்பூசிக்குப் பின் அமெரிக்காவில் உயிரிழப்பு குறையக்கூடும். வரும் ஜூன் 1-ம் தேதி முடிவில் அமெரிக்காவில் 5.89 லட்சம் பேர்வரை உயிரிழக்கக் கூடும் என வாஷிங்டன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் முதன்முதலில் கரோனா உயிரிழப்பு 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் ஏற்பட்டது. அதன்பின் அடுத்த 4 மாதங்களில் ஒரு லட்சமாக அதிகரித்தது. அதன்பின் செப்டம்பரில் 2 லட்சமாகவும், டிசம்பரில் 3 லட்சமாகவும் உயிரிழப்பு கூடியது. அடுத்த ஒரு மாதத்தில் 3 லட்சமாக இருந்த உயிரிழப்பு 4 லட்சமாகவும், அடுத்த ஒரு மாதத்தில் 5 லட்சமாகவும் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் நாள்தோறும் ஏற்படும் கரோனா உயிரிழப்பு கடந்த சில வாரங்களாகக் குறைந்துள்ளது. நாள்தோறும் ஏற்படும் சராசரி கரோனா உயிரிழப்பு 4 ஆயிரத்துக்கும் குறைந்து 1,900 ஆகச் சரிந்தது.
இதுவரை அமெரிக்காவில் 4.40 கோடிக்கும் அதிகமான மக்கள் பைஸர் மற்றும் மாடர்னா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுள்ளனர். சராசரியாக நாள்தோறும் 16 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT