Published : 19 Feb 2021 10:27 AM
Last Updated : 19 Feb 2021 10:27 AM
கடந்த ஜூன் 15-ம் தேதி இந்திய சீன எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் தங்கள் நாட்டைச் சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் பலியானதாக சீன ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.
கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய, சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவத்தினர் வீரமரணம் அடைந்தனர். அதேபோல, சீன ராணுவம் தரப்பில் 35 பேர் வரை உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்தது. ஆனால், சீனத் தரப்பில் உயிரிழப்பு பற்றி எந்த விவரமும் வெளியாகவில்லை.
கடந்த 1967-ல் இந்தியா-சீனா இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பின்னர் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த மோதல் மிகப்பெரிய மோதலாகப் பார்க்கப்பட்டது.
இந்நிலையில், பிஎல்ஏ டெய்லி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், கரகோரம் மலைகளில் பணியமர்ந்தப்பட முன்கள அதிகாரிகள் 5 பேர் சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பேணியதற்காக சீன ராணுவத்தின் மரியாதைக்குத் தகுதி பெறுகின்றனர். 5 பேரில் ஒருவர் காயமடைந்தவர், மற்ற நால்வரும் வீரமரணம் அடைந்தவர்கள் எனத் தெரிவித்துள்ளார்.
சென் ஹோங்ஜுன், ஸியான்க்ராங், ஸியோ சியுவான், வாங் ஜூரோன் ஆகியோர் இறுதிமூச்சு வரை போராடி இறந்தனர் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன ராணுவம் இவ்வாறாக ஒப்புக்கொண்டுள்ளது இதுவே முதல் முறை. சீன சமூக ஊடகங்களிலும் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
லடாக்கின் ஒட்டுமொத்த கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்கும் உரிமை கோருகிறது சீனா. கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டின் மேற்குப் பகுதி முழுவதையும் தனக்கானது என்கிறது சீனா. அதாவது கல்வான் மற்றும் ஷ்யோக் நதிகள் சங்கமிக்கும் இடம் வரை கோருகிறது.
கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு சீனாவுக்குச் சொந்தமானது. சீனாவுக்கே அதில் இறையாண்மையுள்ளது. ஆனால், எல்லை ஒப்பந்தத்தை மீறி இந்திய வீரர்கள் ஆத்திரமூட்டும் வகையில் செயல்படுகிறார்கள். இந்த எல்லைப் பிரச்சினையை இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேசித் தீர்க்க வேண்டும். எல்லையில் கடைப்பிடிக்க வேண்டிய விதிகளை இந்திய ராணுவம் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனால், இந்தியத் தரப்பு அதனைத் தொடர்ந்து இதனை மறுத்து வருகிறது. மேலும், உரிமையை நிலைநாட்ட படைகள் மூலம் போராடி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT