Published : 28 Nov 2015 09:32 AM
Last Updated : 28 Nov 2015 09:32 AM
கிரிக்கெட் தொடர்பான பல திருப்புமுனைகள் ஆஸ்தி ரேலிய மண்ணில் நடந்திருக் கின்றன.
ஐந்து நாள் நடக்கும் டெஸ்ட் பந்தயங்கள் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஒருநாள் போட்டி என்பது அறிமுகமானது ஆஸ்திரேலியாவில்தான்.
ஆனால் இந்தத் திருப்புமுனை தற்செயலாக நடைபெற்ற ஒன்று என்றால் வியப்பு ஏற்படலாம்.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் 1971-ல் ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்ன் மைதானத்தில் போட்டியிட ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. டெஸ்ட் மேட்ச்தான்.
ஆனால் அடுத்தடுத்து மூன்று நாட்களுக்கு போட்டி நடைபெற வில்லை. காரணம் மழை கொட் டித் தீர்த்தது. ‘‘இனி இந்தப் போட்டி நடக்காது’’ என்று அமைப்பாளர்கள் அறிவித்தனர். ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களின் ஏமாற்றம் அளவு கடந்ததாக இருந்தது. சும்மா பேருக்கு ஒரே நாளில் ஒரு கிரிக்கெட் போட்டி நடத்தலாமா என்று யோசித்தார்கள். நாலாவது நாள் நல்லவேளையாக வருண பகவான் பார்வையாளராக வரவில்லை.
1971 ஜனவரி 5 அன்று நடந்தது அந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டி! ஒவ்வொரு அணி யும் 40 ஓவர்கள் பந்து வீசின. வென்றது ஆஸ்திரேலிய அணி. பார்வையாளர்களுக்குப் பேரா னந்தம்.
‘‘அட, ஒரு நாள் போட்டியும் நன்றாகத்தானே இருக்கிறது’ என்று நினைத்தார்கள் விளையாட்டு ரசிகர்கள். ஆனால் பல நாடுகள் இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. (பின்னர் 1975-ல் ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிகள் அறிமுகமாயின).
அடுத்த பெரும் திருப்பு முனையை அறிமுகப்படுத்திய கெர்ரி பாக்கரும் ஆஸ்திரேலி யர்தான். அதுவரை பல்வேறு தேசங் களின் அணிகள் மட்டுமே போட்டியிட்டுக் கொண்டிருக்க, இவர் ‘தனிப்பட்ட ஒரு நாள் போட்டிகளை’ அறிமுகப்படுத் தினார். ஆஸ்திரேலிய அணி ஒருபுறமும், பிற உலக நாடுகளின் அணி மறுபுறமுமாக இது விளை யாடப்பட்டது. உலகெங்கும் உற்சாகமான ஆதரவும் கடுமை யான கண்டனமும் ஒருசேரக் கிடைத்தது.
கெர்ரி பேக்கர் இப்படி ஒரு முயற்சியில் ஏன் ஈடுபட வேண்டும்? பல கிரிக்கெட் வீரர்களுக்குப் போதிய அளவில் வருமானமில்லை என்று தான் நினைத்ததாகவும் அந்த நிலை மாறவேண்டுமென்று இப்படித் திட்டமிட்டதாகவும் அவர் கூறியதுண்டு. ஆனால் இன்னொரு காரணமும் இருந்தது. உலகளாவிய கிரிக்கெட் போட்டிகளை ஆஸ்தி ரேலியாவில் ஒளிபரப்பும் உரிமை அப்போது ABC எனப்படும் ஆஸ்தி ரேலிய ஒளிபரப்புக் குழுவிடம் மட்டுமே இருந்தது. இந்த நிலை மாறவேண்டும் என்று நினைத்தார் ஒரு டி.வி. சேனலுக்குச் சொந்தமான கெர்ரி பாக்கர். இன்று நடைமுறையில் சகஜமாகிவிட்ட பல விஷயங்கள் கெர்ரி பாக்கர் உருவாக்கிய போட்டிகளில்தான் அறிமுகமாயின.
தொலைக்காட்சிக் கோணத்தில் பலவித மாறுதல்கள். சிவப்பு வண்ணக் கிரிக்கெட் பந்து வெள்ளை நிறத்திலும் அறிமுக மானது. எக்கச்சக்கமான கேமரா கோணங்கள், கிராஃபிக் தொழில்நுட்பங்கள், பெருத்த தொகைக்கு தொலைக்காட்சி உரிமங்கள், வெள்ளை உடைக்குப் பதிலாக வண்ண வண்ண உடைகளுடன் கிரிக்கெட் வீரர்கள், பளீர் என்ற விளக்கொளியில் இரவிலும் ஆடப்பட்ட பந்தயங்கள்! ஒவ்வொரு பந்து வீச்சாளரும் அதிகபட்சம் பத்து ஓவர்கள் மட்டுமே பந்து வீசலாம் என்பதிலிருந்து வானிலை சரியில்லை என்றால் எவ்வளவு ஓவர்கள் என்பதுவரை கிரிக்கெட் விதிகளிலும் பலவித மாற்றங்கள். முக்கியமாக பந்தயம் போரடிக்கக் கூடாது. வேகம் வேண்டும். ‘டிராவில்’ முடியாமல், ஒரு முடிவு தெரிந்தாக வேண்டும். இந்தக் கோணங்களில் ஃபீல்டிங்கிலும் பல வியூகங்கள் விதிகளாயின.
ஆஸ்திரேலியாவுக்கு இன்னொரு பெருமையும் உண்டு. கிரிக்கெட் டெஸ்ட் பந்தயச் சரித்திரத்தில் ‘டை’யில் முடிந்த இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி பங்கு பெற்றது. முதல் ‘டை’ ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் மைதானத்தில் ஏற்பட்டது. இரண்டாவது சென்னையில் நடைபெற்றது.
1960 - 61ல் நடைபெற்ற முதல் போட்டி ஆஸ்திரேலிய அணியுடன் மேற்கிந்தியத் தீவு அணி மோதியது. இரண்டாவது போட்டி 1986-87-ல் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதியது இந்திய அணி.
கிரிக்கெட் மட்டுமல்ல, டென் னிஸ் விளையாட்டிலும் ஆஸ்தி ரேலியாவுக்கு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. கிராண்ட் ஸ்லாம் பந்தயங்கள் என்று குறிப்பிடப்படும் கவுரவம்மிக்க நான்கு பந்தயங் களில் ‘ஆஸ்திரேலியன் ஓபன்’ என்பதும் ஒன்று.
(உலகம் உருளும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT