Published : 16 Feb 2021 06:03 PM
Last Updated : 16 Feb 2021 06:03 PM
பிராந்தியத்தில் கடல் வர்த்தகத்தின் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் ஈரானிய மற்றும் ரஷ்ய கடற்படையினர் இந்தியப் பெருங்கடலில் ஒரு கூட்டு கடற்படை பயிற்சியைத் தொடங்கியுள்ளதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஈரான் அரசு ஊடகம் தரப்பில், “ பிராந்தியத்தில் கடல் வர்த்தகத்தின் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் ஈரானிய மற்றும் ரஷ்ய கடற்படையினர் இந்தியப் பெருங்கடலில் சுமார் 17,000 கிலோ மீட்டருக்கு பயிற்சியில் ஈடுபட உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடனான மோதல் வலுத்து வரும் சூழலில் சீனா மற்றும் ரஷ்யாவுடன் நட்புறவை ஈரான் நெருக்கமாகி வருகிறது. இதன் காரணமாக சீனா, ரஷ்யாவுடன் இணைந்து கடந்த சில நாட்களாக கடற்படை பயிற்சியில் ஈரான் ஈடுபட்டு வருகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆக்கபூர்வத் தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அந்நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதைச் செறிவூட்டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி அதிலிருந்து விலகினார்.
மேலும், ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்து வந்தார். இதற்கு பதிலடியாக ஈரான் அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறியது.
இந்நிலையில் டெஹ்ரானுக்கு தெற்கே ஃபோர்டோ என்ற இடத்தில் மலைக்கு அடியில் உள்ள ஆலையில் கடந்த 2015-ல் நிறுத்தப்பட்ட யுரேனியம் செறிவூட்டும் பணியை ஈரான் கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது. இதன் காரணமாக ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் வலுத்து வந்தது.
இந்த நிலையில், 2015 ஆம் ஆண்டின் அணுசக்தி ஒப்பந்தங்களுக்கு ஈரான் இணங்கும்வரை அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படாது என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT