Published : 14 Nov 2015 10:56 AM
Last Updated : 14 Nov 2015 10:56 AM
சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்) இயக்கத்தின் முக்கிய தீவிரவாதிகளில் ஒருவரான ஜிகாதி ஜான் (26) உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.
பிணைய கைதிகள் கொடூரமாக முறையில் கழுத்து அறுத்து கொல்லப்படும் வீடியோக்களை ஐ.எஸ். வெளியிட்டுள்ளது. இந்த வீடியோக்களில் பிணைய கைதிகளை கொலை செய்யும் கல்நெஞ்சுக்காரர் ஜிகாதி ஜான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐ.எஸ். அமைப்பில் முக்கிய நபராக விளங்கும் ஜிகாதி ஜான் பிரிட்டனைச் சேர்ந்தவர்.
இவர், ஐ.எஸ். அமைப்பை விட்டு விலகிவிட்டதாகவும் வடக்கு ஆப்ரிக்காவுக்கு செல்வதற்காக இவர் சிரியாவில் இருந்து தப்பிச் செல்வதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் ஜிகாதி ஜானை குறிவைத்து சிரியாவின் வடக்கில் உள்ள ரக்கா நகரில் அமெரிக்க போர் விமானங்கள் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தின. இத்தகவலை வெளியிட்ட பென்டகன் செய்தித் தொடர்பாளர் பீட்டர் குக், தாக்குதலின் முடிவுகளை ஆராய்ந்து வருவதாக கூறினார்.
இந்நிலையில் சிரியாவில் உள்ள மனித உரிமை கண்காணிப்பகத்தின் இயக்குநர் ரமி அதுல் ரஹ்மான் நேற்று கூறும்போது, “ரக்கா நகரில் ஐ.எஸ். நிர்வாக அலுவலகம் மீது அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்திய பிறகு, ஐ.எஸ். தீவிரவாதிகள் பயணம் செய்த காரை குறிவைத்து தாக்கின. இதில் காரில் பயணம் செய்த பிரிட்டனைச் சேர்ந்த ஜிகாதி ஒருவர் உட்பட வெளிநாட்டு தீவிரவாதிகள் 4 பேர் உயிரிழந்தனர். இவர்களின் உடல்கள் ரக்கா நகர மருத்து வமனையில் வைக்கப்பட்டுள்ளன. இதில் ஜிகாதி ஜானின் உடலும் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன” என்றார்.
யார் இந்த ஜிகாதி ஜான்
ஜிகாதி ஜானின் இயற்பெயர் முகமது எம்வாஸி. 1988-ம் ஆண்டு குவைத்தில் பிறந்தார். கடந்த 1994-ம் ஆண்டு இவரது பெற்றோர் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தனர். இங்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம் பெற்ற இவர், கடந்த 2013-ம் ஆண்டு ஐ.எஸ். அமைப்பால் ஈர்க்கப்பட்டு சிரியா சென்றார். முன்னதாக இவர் செக்யூரிட்டி பணியில் ஈடுபட்டு வந்ததாகவும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பாக இவரை போலீஸ் பிடித்து விசாரித்துள் ளதாகவும் கூறப்படுகிறது.
முகம்மது எம்வாஸி, பள்ளிப் பருவத்தில் அமைதியான மாண வராக இருந்துள்ளார். கால்பந்து விளையாட்டு மற்றும் பாப் இசையில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். வருங்காலத்தில் கால்பந்து வீரராக வரவேண்டும் என்று அவர் ஒருமுறை கூறியுள்ளார். இந்நிலையில் இவர் இரக்கமற்ற கொலையாளியாக மாறியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்க பத்திரிகையாளர்கள் ஸ்டீவன் சாட்லாஃப், ஜேம்ஸ் ஃபோலி, அமெரிக்க தொண்டு நிறுவன ஊழியர் அப்துல் ரஹ்மான் காசிக், பிரிட்டன் தொண்டு நிறுவன ஊழியர்கள் டேவிட் ஹேன்ஸ், ஆலன் ஹென்னிங், ஜப்பானிய பத்திரிகையாளர் கென்ஜி கோடோ உள்ளிட்ட பலர் கொடூரமாக கொல்லப்படும் வீடியோக்களை ஐ.எஸ். வெளியிட்டுள்ளது. இந்த வீடியோக்களில் பிணைய கைதிகளை கொலை செய்பவர் ஜிகாதி ஜான் என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் பீட்டர் குக் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT