Published : 15 Feb 2021 09:36 AM
Last Updated : 15 Feb 2021 09:36 AM
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பொது மக்கள் நடத்தும் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.
ராணுவ ஆட்சிக்கு எதிராகவும், மீண்டும் ஜனநாயக ஆட்சி மலர வேண்டும் என்றும் மியான்மரில் பல்வேறு போரட்டங்களை மக்கள் முன்னின்று நடத்தி வருகின்றன. இந்த நிலையில் மியான்மர் போராட்டத்துக்கு சர்வதேச அளவில் குரல்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் மியான்மரில் இயங்கும் அமெரிக்க தூதரகம், மக்கள் எழுச்சிப் போராட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்கத் தூதரக தரப்பில், “ மியான்மரில் மக்கள் ஜனநாயகம், சுதந்திரம், அமைதி மற்றும் செழிப்புக்கான தேடலை நாங்கள் ஆதரிக்கிறோம். உலகம் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் ஆண்டோனியா குத்தரெஸ் கூறும்போது, “நாங்கள் மியான்மரில் நிலமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
நடந்தது என்ன?
மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது.
இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.
மேலும் ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. ஆங் சான் சூச்சி, முறைகேடாக வாக்கி டாக்கிகளை இறக்குமதி செய்ததாக ராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், அவரை பிப்ரவரி 15 (இன்று) வரை காவலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆங் சான் சூச்சி விடுதலை செய்யப்பட வேண்டும் என ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT