Published : 11 Nov 2015 06:10 PM
Last Updated : 11 Nov 2015 06:10 PM
எகிப்து அருகே ரஷ்ய விமானம் சமீபத்தில் வெடித்துச் சிதறிய அதே பகுதியில், பிரிட்டனைச் சேர்ந்த பயணிகள் விமானம் ஒன்று கடந்த ஆகஸ்ட் மாதம் ஏவுகணை தாக்குதலில் இருந்து நூலிழையில் தப்பியதாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த வார இறுதியில் ரஷ்யாவின் பயணிகள் விமானம் எகிப்தை அடுத்த சினை தீபகற்ப பகுதியில் வெடித்துச் சிதறியது. இதில் பயணம் செய்த 224 பேரும் பலியாயினர். இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஐஎஸ் தீவிரவாத அமைப்பு அறிவித்தது. ஆனால் ரஷ்ய அரசு இதை மறுத்தது. இதற்கிடையே, அந்த விமானத்தில் வெடிகுண்டு இருந்திருக்கலாம் என அமெரிக்க மற்றும் பிரிட்டன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் பிரிட்டனின் முன்னணி நாளிதழ் ஒன்றில் வெளியான தகவல் வருமாறு:
தாம்சன் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஜெட் விமானம், கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி 189 பயணிகளுடன் லண்டன் நகரிலிருந்து செங்கடல் ரிசார்ட் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது.
எகிப்து அருகே சென்று கொண்டிருந்தபோது அப்பகுதியில் சுமார் 1000 அடி தொலைவுக்குள் ஒரு ஏவுகணை வருவதை அறிந்த விமானி, விமானத்தை பத்திரமாக தரையிறக்கி உள்ளார். ஆனால் இந்த சம்பவம் குறித்து அதில் இருந்த பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளதாக அந்த நாளிதழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தத் தகவலை பிரிட்டன் அரசின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இது குறிவைத்த தாக்குதல் இல்லை என்றும், எகிப்து ராணுவம் நடத்திய வழக்கமான ஏவுகணை பரிசோதனை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது” என்றார். எகிப்து அதிகாரிகளும் இதே தகவலை தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT