Published : 09 Feb 2021 05:39 PM
Last Updated : 09 Feb 2021 05:39 PM

கரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணியைத் தொடங்கிய ஈரான்

கரோனா தடுப்பு மருந்தை மக்களுக்குச் செலுத்தும் பணியை ஈரான் அரசு தொடங்கியது .

இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை தரப்பில், “ரஷ்யாவிலிருந்து ஸ்புட்னிக் கரோனா தடுப்பு மருந்துகள் ஈரானுக்கு வந்தடைந்தன. இந்த நிலையில் ஸ்புட்னிக் கரோனா தடுப்பு மருந்தைப் பொதுமக்களுக்குச் செலுத்தும் பணி தொடங்கியது. சுகாதாரத் துறை அமைச்சர் சயீத் நமாகிக்கு முதன்முதலாகச் செலுத்தப்பட்டது. ஈரானில் 600க்கும் மேற்பட்ட மருத்துவ மையங்களில் கரோனா தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்தும் பரிசோதனையை அந்நாட்டு அரசு கடந்த மாதம் தொடங்கியது. இந்த நிலையில் தற்போது ரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்துகளைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளது.

ஈரானில் சமீப நாட்களாகவே கரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு பழைய கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜிம், உணவகங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானும், சவுதியும் கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. 80 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஈரான், கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மத்தியக் கிழக்கு நாடாக உள்ளது.

முன்னதாக, ''அமெரிக்கா மற்றும் பிரிட்டனிடமிருந்து கரோனா தடுப்பு மருந்துகளை ஈரான் வாங்காது. அவர்களது தடுப்பு மருந்துகளை நம்ப முடியாது. பிரான்ஸின் தடுப்பு மருந்துகளும் நம்பிக்கைக்குரியது அல்ல. நாங்கள் எங்களுக்கு கரோனா தடுப்பு குறித்து நம்பகத்தன்மை எங்கு உள்ளதோ அங்கு வாங்குவோம்'' என்று ஈரான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x