Published : 01 Feb 2021 04:02 PM
Last Updated : 01 Feb 2021 04:02 PM
மியான்மர் நாட்டில் ராணுவப் புரட்சி ஏற்பட்டுள்ளதற்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ராணுவப் புரட்சிக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். சட்டவிரோதமாக பொது மக்களையும், ஆங் சாங் சூச்சி போன்ற தலைவர்களையும் சிறைபிடித்து வைத்திருப்பது கண்டனத்துக்குரியது. தேர்தலில், மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும். தலைவர்களை விடுவிக்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, மியான்மரில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூச்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உள்பட 90-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக கட்சி அறிவித்தது.
இந்தநிலையில் ஆங் சான் சூச்சி ராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மியான்மரில் ஆங் சான் சூச்சி உள்ளிட்ட தலைவர்கள் ராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ராணுவ ஆட்சி வரலாறு:
கடந்த 1962 முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்றது. இதை எதிர்த்து தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஆங் சாங் சூச்சி சுதந்திர போராட்டத்தை வழிநடத்தினார். சுமார் 21 ஆண்டுகள் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
மக்களின் போராட்டம் காரணமாக கடந்த 2015-ல் அங்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில்ஆங் சான் சூச்சியின் கட்சி அமோக வெற்றி பெற்றது.
அவரின் மகன்கள் வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருப்பதால் அவரால் அதிபர் பதவியேற்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து சூகிக்கு நெருக்கமான டின் கியாவ் (71) அதிபர் பதவியேற்றார். நாட்டின் தலைமை ஆலோசகராக ஆங் சாங் சூச்சி பொறுப்பேற்றார்.
ராக்கைன் மாநிலத்தில் ராணுவத் தளபதிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளால் 7.40 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர்.
சூச்சிக்கு இருந்த ஜனநாயகப் பிம்பமானது இந்த நடவடிக்கைகளை அவர் வெளிப்படையாக ஆதரித்ததன் மூலம் சிதைந்துபோனது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT