Published : 27 Jan 2021 12:50 PM
Last Updated : 27 Jan 2021 12:50 PM
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் கரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் இரண்டாவது டோஸை பெற்று கொண்டார்.
இதுகுறித்து சி - ஸ்பேன் செய்தி நிறுவனத்திற்கு கமலா ஹாரிஸ் கூறும்போது, “ உங்கள் வாய்ப்பு வரும்போது அனைவரும் கரோனா தடுப்பு மருந்தை போட்டுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கரோனா தடுப்பு மருந்து உங்கள் வாழ்வை பாதுகாக்கும்” என்றார்.
அமெரிக்காவில் கடந்த வாரத்தில் மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக தான் பதவி ஏற்ற பிறகு 100 நாட்களில் 10 கோடி மக்களுக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்று ஜோ பைடன் உறுதி ஏற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,08,36,681 ஆக உள்ளது. இதுவரை 21 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 7.2 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
கரோனாவினால் அதிகம் பாதிப்பு ஏற்பட்ட நாடுகளில் அமெரிக்க்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 2.6 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் இதுவரை 1 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தெற்கு இங்கிலாந்தில் உள்ள கென்ட் மாகாணத்தில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ், ஏற்கெனவே இருந்த கரோனா வைரஸ் பரவும் வேகத்தைவிட 70 சதவீதம் வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என அறியப்பட்டது.
இதையடுத்து, பிரிட்டன் உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளில் நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது . மேலும், பிரிட்டனுக்கு 40க்கும் மேற்பட்ட நாடுகள் விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளன.
கரோனா பரவல் ஒருபுறம் இருக்க, பல நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT