Published : 27 Jan 2021 11:47 AM
Last Updated : 27 Jan 2021 11:47 AM
இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.க்கள் பிரமிளா ஜெயபால், ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பட்ஜெட் குழுவிலும், கரோனா வைரஸ் சிக்கல் தீர்வுக் குழுவிலும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பிரிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்ஸி பெலோசி வெளியிட்டார்.
இதன்படி, அதிகாரமிக்க பட்ஜெட் குழுவில் இந்திய வம்சாவளி எம்.பி. பிரமிளா ஜெயபாலும், கரோனா வைரஸ் சிக்கல் தீர்வுக் குழுவில் 47 வயதாகும் ராஜா கிருஷ்ணமூர்த்தியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், “அமெரிக்க மக்களின் சுகாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய அமைக்கப்பட்டுள்ள கரோனா வைரஸ் சிக்கல் தீர்வுக் குழுவின் தலைவர் க்ளைபர்ன், மற்றும் உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன். கரோனா வைரஸைத் தோற்கடித்து நமது பொருளாதாரத்தைக் கட்டமைப்போம்” எனத் தெரிவித்தார்.
கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து எம்.பி.யாக இருந்து வரும் இந்தியப் பெண் பிரமிளா ஜெயபால், பட்ஜெட் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பட்ஜெட் குழுவின் தலைவராக எம்.பி. ஜான் யார்முத் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய அமெரிக்கவாழ் பெண் பிரமிளா ஜெயபால் என்பது குறிப்பிடத்தக்கது. பிரமிளா ஜெயபாலின் முயற்சியால்தான் அமெரிக்காவில் ஒரு மணி நேரத்துக்கு குறைந்தபட்சம் 15 டாலர்கள் ஊதியம் தர வேண்டும் எனும் மாற்றம் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்பு மோசமாக இருந்து வருகிறது. இதுவரை 4.20 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். 2.52 கோடி மக்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றபின், 1.90 லட்சம் கோடி நிவாரணத் தொகையை மக்களுக்கு அறிவித்துள்ளார். இதன்படி ஒவ்வொரு அமெரிக்கரும் சராசரியாக 1,400 டாலர்கள் நிவாரணமாகப் பெறுவார்கள்.
இந்திய மதிப்பின்படி, சராசரியாக நபர் ஒருவருக்கு ரூ.1.10 லட்சம் வழங்கப்படும். நிவாரணத் தொகை மட்டுமல்லாமல் வேலையின்மை நிவாரணமும் சேர்த்து வழங்கப்படும் என அதிபர் பைடன் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT