Published : 23 Jan 2021 11:46 AM
Last Updated : 23 Jan 2021 11:46 AM
பிரேசில் நாட்டுக்கு 20 லட்சம் கரோனா தடுப்பு மருந்துகளை இந்தியா அனுப்பி வைத்தமைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஹனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கிவரும் படத்தைப் பதிவிட்டு பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் ஜேர் போல்சனோரா நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியா சார்பில் அண்டை நாடுகளுக்கு கரோனா தடுப்பு மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பூடான், நேபாளம், மாலத்தீவு, மியான்மர், வங்கதேசம், இலங்கை, ஆகிய நாடுகளுக்கு கரோனா தடுப்பு மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன.
இது தவிர சிறப்பு விமானங்கள் மூலம் செஷல்ஸ், மொரிஷியஸ், மியான்மர் நாடுகளுக்கும், ஒப்பந்த அடிப்படையில், சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, மொராக்கோ, வங்கதேசம், பிரேசில், மியான்மர் நாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.
இதன்படி சிறப்பு விமானத்தில் 20 லட்சம் ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜென்கா நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்துகள் பிரேசில் நாட்டுக்கு நேற்று இந்தியா சார்பில் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த மருந்துகள் இன்று காலை பிரேசில் நாட்டுக்குச் சென்றடைந்ததாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இதையடுத்து, பிரேசில் அதிபர் ஜேர் போல்சனோரா, கரோனா தடுப்பு மருந்து அனுப்பி வைத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ளார்.
அந்த ட்விட்டர் செய்தியில், கடவுள் ஹனுமன் படத்தைப் பதிவிட்ட பிரேசில் அதிபர், ஹனுமன் சஞ்சீவி மலையை தூக்கிச் சென்று பறப்பது போன்றும், அந்தமலையில் தடுப்பூசி இருப்பது போன்றும் படம் அமைக்கப்பட்டுள்ளது.
ராமாயணத்தில் நடக்கும் போரில், லட்சுமணன் மயங்கிச் சரிந்தபோது, ஹனுமன் சஞ்சீவி மலையை பெயர்த்துக் கொண்டுவருவார். அதை நினைவுகூரும் வகையில் ஹனுமன் படத்தை பிரேசில் அதிபர் போல்சனோரா பதிவிட்டுள்ளார்.
பிரேசில் அதிபர் போல்சனோரா பதிவிட்ட ட்விட்டர் கருத்தில், “ வணக்கம் (நமஸ்கார்) பிரதமர் மோடி. உலகளாவிய தடைகளைக் கடந்து உங்களுடன் இணைந்து செயலாற்றும் இருப்பதில் பிரேசில் பெருமை கொள்கிறது. இந்தியாவில் இருந்து பிரேசிலுக்கு கரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்தமைக்கு நன்றி (தன்யவாத்)” எனத் தெரிவித்துள்ளார்.
பிரேசில் அதிபர் போல்சனோராவுக்குப் பதில் அளித்து பிரதமர் மோடியும் ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில், “கரோனா வைரஸுக்கு எதிரான போரில் இணைந்து செயலாற்றும் நம்பிக்கைக்குரிய நட்பு நாடாக பிரேசில் இருப்பது எங்களுக்குப் பெருமை. சுகாதாரம் தொடர்பான விஷயங்களில் இரு நாடுகளும் தொடர்ந்து வலிமையான கூட்டுறவுடன் செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT