Last Updated : 02 Oct, 2015 11:52 AM

 

Published : 02 Oct 2015 11:52 AM
Last Updated : 02 Oct 2015 11:52 AM

தொடர் சிக்கல்களில் துருக்கி - 11

ஒட்டாமன் சாம்ராஜ்யம் வீழ்ந்த பிறகு 1923-ல்தான் இப் போதைய துருக்கி உரு வானது. இந்த நாட்டின் தற் போதைய நாணயம் துருக்கிய லிரா. மன்டி, கெபாப் போன்ற பிரபல ஐரோப்பிய உணவு வகைகளின் தாயகம் துருக்கிதான். காவியங்களில் இடம் பெற்ற தொன்மையான ட்ராய் நகரம் குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள் (Helen of troy). அது இருந்தது தற்போதைய துருக்கியில்தான். இங்கு சாலையின் வலதுபுறமாகத் தான் வண்டி ஒட்டுவார்கள். மிகப் பெரிய ராணுவத்தைக் கொண்டது துருக்கி.

ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பும், குர்துகளும் பகைவர்கள் ஆனது எப்படி?

ஒருவிதத்தில் பார்த்தால் இது கொஞ்சம் விந்தையானது. ஐ.எஸ்.அமைப்பு சன்னிகளுக்கானது. இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை உலகின் பல பகுதிகளுக்கு பரப்ப வேண்டும் என்பது நோக்கமாக இருந்தாலும் இதில் உறுப்பினர் ஆனவர்களில் கிட்டத்தட்ட எல்லோருமே சன்னி முஸ்லிம்கள்.

குர்துகளை குறிப்பிட்ட மதத்தவர் என்றோ, குறிப்பிட்ட இனத்தவர் என்றோ குறிப்பிட முடியாது. என்றாலும் இதில் மிகப் பலரும் சன்னி பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்கள்தான்.

அப்படி இருக்க இந்த இரு தரப்பினரும் துருக்கியில் ஏன் மோதிக் கொள்ள வேண்டும்? பொதுவான எதிரியாக துருக்கி ஆட்சியை இவர்கள் பாவித்து இணைந்தே போரிடலாமே?

ஐ.எஸ்.அமைப்பைப் பொறுத்த வரை குர்துகளை அவர்கள் முழுமையான முஸ்லிம் பிரி வாகப் பார்த்ததில்லை. அவர் களை அந்நியர்களாகத்தான் பார்க்கிறார்கள்.

பகைமையை வளர்ப்பதுபோல் சமீப வருடங்களில் பல சம்பவங்கள் நடந்து விட்டன.

2013-ல் வடக்கு சிரியாவில் குர்துகள் அதிகம் வசித்த மூன்று பகுதிகளை தாக்கத் தொடங்கியது ஐ.எஸ். தொடர்ந்து ஒரு வருடத் துக்கு இந்தத் தாக்குதல் நடை பெற்றது.

கொஞ்சம் தாமதமாக பதிலுக்கு தாக்கத் தொடங்கினர் YPG அமைப்பினர். இது சிரியாவின் குர்திஷ் ஜனநாயகக் கட்சியின் ராணுவப் பிரிவு. இராக்கில் இருந்த யுத்தக் கருவிகள் பலவற்றையும் கைப்பற்றிக் கொண்டு சிரியாவில் நுழையத் தொடங்கி இருந்தனர் ஐ.எஸ்.அமைப்பினர்.

இராக்கில் குர்துகள் ஆட்சி செய்த பகுதி ஓரளவு சுயாட்சி பெற்றதாக இருந்தது. இந்தப் பகுதியினர் அப்போதே ஐ.எஸ்.அமைப்பினரை எதிர்க்கத் தொடங்கி விட்டனர்.

இந்தப் பகைமை சிரியாவில் தீவிரமடைந்தது.

ஐ.எஸ்.க்கு எதிராக அமெரிக்கா வட இராக்கில் வான்வழித் தாக்குதல் நடத்தியது. சில ஐரோப்பிய நாடுகளும் இராக்கிற்கு (குர்துகள் ஆட்சி செய்த பகுதிக்குமாக சேர்த்து) ஆயுதங்களை அனுப்பின.

அந்த சமயத்தில் துருக்கியி லிருந்த குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியும் இராக்கிற்கு இந்தக் கோணத்தில் உதவியாக இருந்தது.

சிரியாவின் எல்லைப் பகுதியிலிருந்த கோபேன் (Kobane) என்ற சிறு நகரின் மீது தாக்குதல் நடத்தியது ஐ.எஸ். இதனால் அங்கிருந்து சுமார் 1,60,000 மக்கள் துருக்கியில் தஞ்சம் அடைந்தனர். இவர்களில் மிக அதிகமானவர்கள் குர்துகள்.

ஐ.எஸ்.அமைப்பின் மீது துருக்கி அரசு தாக்குதல் நடத்த வேண்டும் என்று எதிர்பார்த்தனர் குர்துகள். அல்லது குறைந்தபட்சம் ஐ.எஸ்.அமைப்பை தாங்கள் எதிர்க்கும்போது மறைமுக ஆதரவு அளிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் இதற்கெல்லாம் உடன்பட மறுத்தது துருக்கி அரசு. இதனால் அந்த அரசோடு தாங்கள் நடத்தத் தொடங்கியிருந்த அமைதிப் பேச்சு வார்த்தைகளை குர்துகள் நிறுத்திக் கொண்டார்கள்.

சென்ற ஆண்டு அக்டோபரி லிருந்தே அமெரிக்க ராணுவத் தோடு கொஞ்சம் இணைந்து செயல்படுகிறார்கள் குர்து போராளி கள். பொதுவான எதிரி ஐ.எஸ்.க்கு எதிராக இந்த இருதரப்பினரும் கைகோத்திருக்கிறார்கள். துருக்கியில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் எங்கெங்கே கூடாரம் அமைத்திருக் கிறார்கள் என்பது குறித்த ரகசிய விவரங்களை குர்து போராளிகள் அமெரிக்க உளவுத்துறைக்கு தகவல் கொடுக்க, சரியான இடங்களில் வான்தாக்குதல் நடத்துகிறது அமெரிக்கா.

இந்த நடவடிக்கை குர்துகளுக் கும் வசதியாக இருக்கிறது. துருக்கி எல்லைகளில் குர்துகள் அதிகம் வசித்த சில பகுதிகளை ஐ.எஸ்.பலவந்தமாக ஆக்ரமித்துக் கொண்டது. அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல் காரண மாக ஐ.எஸ்.தீவிரவாதிகள் அழிக் கப்பட்டு வருகின்றனர். இதனால் இழந்த பகுதிகளை மீண்டும் அடைகிறார்கள் குர்துகள்.

ஐ.எஸ்.அமைப்பை அழிக்கும் செயலில் துருக்கி அரசின் ஆதரவையும் கோரி வருகிறது அமெரிக்கா. 1952லிருந்தே துருக்கி நேட்டோ அமைப்பின் உறுப்பினராக இருக்கிறது. எனவே ஐ.எஸ்.அமைப்பு சிரியாவில் பரவாமல் இருக்கவும்கூட துருக்கி உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கிறது அமெரிக்கா. ஆனால் துருக்கி அரசுக்கு இதில் தயக்கம். அமெரிக்கா ஆதரவைப் பெற்றால் ஐ.எஸ்-ஸின் தாக்குதல் மேலும் கடுமை அடையலாம் என்பதும் இந்தத் தயக்கத்துக்கு ஒரு காரணம்.

பின்னர் ஒரு கால கட்டத்தில் அமெரிக்காவுக்கு உதவ ஒப்புக் கொண்டது துருக்கி அரசு. ஆனால் எழுதப்படாத நிபந்தனை ஒன்றையும் விதித்தது. துருக்கிய எல்லையில் உள்ள சிரியாவின் பகுதிகளை ஐ.எஸ்., குர்துகள் ஆகிய இருதரப்பினரின் பிடியிலிருந்தும் அமெரிக்கா நீக்க வேண்டும் என்பதுதான் அது.

இதற்கு பதில் மரியாதையாக தனது எல்லைக்குள் அமெரிக்கா போர் விமான தளங்களை அமைத்துக் கொள்ள துருக்கி ஒத்துக் கொண்டிருக்கிறது.

தங்களது முதல் எதிரி ஐ.எஸ்.தான் என்று தீர்மானித்துள்ள அமெரிக்கா குர்துகளின் கட்சிக்கு எதிராகவும் கருத்துகளை வீசி வருகிறது.

“தற்காப்பு என்ற கோணத்தில் எதையும் செய்யும் உரிமை துருக்கிக்கு உண்டு. இந்த விதத்தில் அவர்களது உரிமைகளை நாங்கள் முழுமையாக மதிக் கிறோம்’’ என்று பொதுப்படையான அறிவிப்பு ஒன்றை வெளியிட் டுள்ளது.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x