Published : 20 Jan 2021 06:14 PM
Last Updated : 20 Jan 2021 06:14 PM
தனது பதவிக்காலம் இன்னும் சில மணி நேரங்களில் முடிந்தவுடன் வாஷிங்டனில் இருந்து வெளியேறும் அதிபர் ட்ரம்ப், புளோரிடாவில் உள்ள பாம் பீச் தீவில் உள்ள மார் ஏ லாகோ எஸ்டேட் இல்லத்தில் குடியேறுகிறார்.
வாஷிங்டனில் இருந்து ஏராளமான பொருட்களுடன் செல்லும் டிரக்குகள், பாம் கடற்கரையில் உள்ள மார் ஏ லாகோ இல்லத்தை நோக்கிச் செல்கின்றன என்று 'தி நியூயார்க் டைம்ஸ்' நாளேடு தெரிவிக்கிறது.
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்கும் சில மணி நேரத்துக்கு முன் அதிபர் ட்ரம்ப் மார் ஏ லாகோ இல்லத்துக்குச் சென்றுவிடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
டொனால்ட் ட்ரம்ப்பின் குளிர்கால இல்லமாக மார் ஏ லாகோ இல்லம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள டிரம்ப் டவர் இல்லத்திலிருந்து வெளிேய மார் ஏ லாகோ இல்லத்துக்கு ட்ரம்ப் குடியேறினார்.
கடந்த 1985-ம் ஆண்டு ஒரு கோடி அமெரிக்க டாலருக்கு வாங்கப்பட்ட இந்த மார் ஏ லாகோ இல்லம் கடந்த 4 ஆண்டுகளாக குளிர்காலத்தில் ட்ரம்ப் பயன்படுத்தும் இல்லமாக இருந்து வருகிறது.
20 ஏக்கர் பரப்பளவில் மூரிஷ்-மீடிட்டேரியன் கட்டமைப்பில் 128 அறைகளுடன் கடந்த 1927-ம் ஆண்டு இந்த இல்லம் கட்டப்பட்டது. அட்லாண்டிக் பெருங்கடலைத் திறந்த வெளியில் ரசித்துக் கொண்டே குடியிருக்கும் வகையில் இந்த இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. 20 ஆயிரம் சதுர அடியில் கால்பந்து மைதானம், 4 டென்னிஸ் மைதானம், நீச்சல் குளம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
வர்த்தக நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ள மார் ஏ லாகோ எஸ்டேட்டில் யார் வேண்டுமானாலும் கோடிக்கணக்கில் பணம் செலுத்தி உறுப்பினராகி வந்து செல்லலாம்.
இங்குள்ள ஒரு தனிப்பட்ட இல்லத்தில் அதிபர் ட்ரம்ப் தனது கடைசிக்கட்ட வாழ்க்கையைச் செலவிட உள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இங்குதான் ட்ரம்ப் வாழப்போகிறாரா அல்லது குளிர்காலத்துக்குப் பின் வெளியேறிவிடுவாரா எனத் தெரியவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT