Published : 02 Oct 2015 07:57 AM
Last Updated : 02 Oct 2015 07:57 AM
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய மாநாட்டில், இலங்கை போர்க்குற்றம் குறித்த அமெரிக்காவின் தீர்மானம் நேற்று வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்துக்கு இந்தியா, சீனா, ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
இலங்கையில் இறுதிக்கட்ட உள்நாட் டுப்போரின்போது 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையக் குழு விசாரணை நடத்தியது. இக் குழுவின் அறிக்கை இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் கடந்த ஜனவரியில் பதவியேற்ற அதிபர் மைத்ரிபால தலைமையிலான அரசு கேட்டுக் கொண்டதன்பேரில் அறிக்கை தாக்கல் செய்வது 6 மாதங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இந்தப் பின்னணியில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் 30-வது மாநாடு ஜெனீவாவில் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இதில் இலங்கை போர்க்குற்றம் குறித்த நிபுணர் குழுவின் அறிக்கை கடந்த 16-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
உள்நாட்டுப் போரின்போது இலங்கை ராணுவமும் விடுதலைப் புலிகளும் பரஸ்பரம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டன. இதுகுறித்து சர்வதேச நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து இலங்கை போர்க்குற்றம் குறித்து அமெரிக்க அரசு தரப்பில் கடந்த 24-ம் தேதி மனித உரிமை ஆணையத்தில் ஓர் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 20 அம்சங்கள் கொண்ட அந்தத் தீர்மானத்தில் இலங்கை நீதித் துறையின் மேற்பார்வையில் வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய குழு விசாரணை நடத்தலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டது.
ஒருமனதாக நிறைவேற்றம்
இந்தத் தீர்மானம் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நேற்று மாலை விவாதம் தொடங்கியது. முதலில் அமெரிக்க தூதர் கெய்த் ஹாப்பர் பேசி னார். அதைத் தொடர்ந்து மாசிடோனியா, பிரிட்டன், சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தூதர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாகப் பேசினர்.
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் 47 நாடுகள் உறுப்பினராக உள்ளன. பெரும்பாலான நாடுகள் தீர்மானம் குறித்து உரையாற்ற முன்வராத நிலையில் இலங்கை தூதர் ரவிநாத ஆரியசிங்கவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
தீர்மானத்துக்கு ஆதரவாகப் பேசிய அவர், “ஐ.நா.வின் ஆலோசனைப்படி இலங்கை அரசு தேசிய விசாரணையை நடத்தும். இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் இன மக்கள் ஒற்றுமையாக வாழ வழிவகை செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து அமெரிக்க தீர்மானம் குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டுமா என்று உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. எந்த நாடும் வாக்கெடுப்பு கோராத நிலையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்தியா கருத்து
தீர்மானம் நிறைவேறிய பிறகு இந்திய பிரதிநிதி பேசியபோது, “தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். இலங்கையில் தமிழர்கள் உட்பட அனைத்து பிரிவு மக்க ளுக்கும் சமஉரிமை கிடைக்க வேண்டும். இலங்கை அரசியல் சாசனத்தின் 13-வது திருத்தத்தை செயல்படுத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்க தீர்மானத்தில், சர்வதேச நீதிபதிகள், காமன்வெல்த் நாடுகளின் நீதிபதிகள் மற்றும் இலங்கை அரசின் ஒத்துழைப்புடன் நீதி விசாரணை நடைபெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிருப்தி
இந்த தீர்மானம் குறித்து இலங்கையின் பிரதான கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுகுறித்து கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுமந்திரன் நிருபர்களிடம் கூறியபோது, “தீர்மானத்தில் சில சாதகமான அம்சங்கள் இருந்தாலும் இது வலு குறைந்த தீர்மானம் என்றே கருதுகிறோம். எனினும் புதிய விசாரணைக் குழுவின் மூலம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்து பாடுபடும்” என்று தெரிவித்தார்.
இலங்கை இறுதிக்கட்ட போருக்குப் பிறகு வவுனியா பகுதியில் முள்வேலி முகாமுக்குள் அடைக்கப் பட்டிருந்த தமிழர்கள்.
(கோப்புப் படம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT