Last Updated : 09 Jan, 2021 10:50 AM

2  

Published : 09 Jan 2021 10:50 AM
Last Updated : 09 Jan 2021 10:50 AM

ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம்

அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து விடுபடவிருக்கும் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

அமெரிக்க அதிபராக அவருக்கு வரும் 20-ம் தேதி முறைப்படி பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படுகிறது. இதனையொட்டி, அமெரிக்காவின் 46-வது அதிபராக அவர் பதவி ஏற்க வழிவகை செய்ய அவரது வெற்றியை அங்கீகரித்து சான்றிதழ் அளிக்கு நிகழ்வு அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்தது.

அப்போது, நாடாளுமன்றத்தின் அருகே திரண்ட ட்ரம்ப் ஆதரவாளர்கள், நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்றனர். இதனால், ஏற்பட்ட கலவரம், மோதலில் 4 பேர் உயிரிழந்தனர்.

இதற்கு ட்விட்டரில் ட்ரம்ப் வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்ட கருத்துகளே காரணம் எனக் கூறப்பட்டது. இதனால், அவரின் தனிப்பட்ட ட்விட்டர் (@realDonaldTrump) கணக்கு முடக்கப்பட்டது.

உடனே, @POTUS என்ற அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ கணக்கிலிருந்து ட்ரம்ப் ட்வீட் செய்யத் தொடங்கினார். ஆரம்பத்தில் அப்பதிவுகள் நீக்கப்பட்டன.

இந்நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்க அதிபருக்கான @POTUS என்ற ட்விட்டர் கணக்கும் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.

மீண்டும் வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துப் பதிவிடலாம் என்பதால் அந்தக் கணக்கை நீக்குவதாக ட்விட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அந்தக் கணக்கில் பதிவிடப்பட்ட அத்தனை ட்வீட்களும் நீக்கப்பட்டன.

ஏற்கெனவே, ட்ரம்ப்பின் ஃபேஸ்புக் கணக்கை காலவரையறையின்றி முடக்குவதாக கடந்த வியாழக்கிழமையன்று அந்நிறுவனம் அறிவித்தது. ட்விட்ச், ஸ்னாப் சாட் உள்ளிட்ட மற்ற சமூக ஊடகங்களும் ட்ரம்ப்பின் கணக்குகளை நீக்கியிருந்தன.

அமெரிக்க அதிபரின் ட்விட்டர் கணக்கு உள்ளிட்ட சமூக வலைதளக் கணக்குகள் முடக்கப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பேச்சு சுதந்திரத்தை முடக்கும் ட்விட்டர்: ட்ரம்ப் கண்டனம்

தனது தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு, அதிபரின் கணக்கு என அனைத்தையும் முடக்கிய ட்விட்டர் நிறுவனத்தை ட்ரம்ப் வெகுவாகச் சாடியுள்ளார். ட்விட்டர் நிறுவனம் பேச்சு சுதந்திரத்தைத் தடை செய்வதாகவும், தன்னைப் பேசாமல் அமைதியாக இருக்கச் செய்வதற்காக தனது கணக்கை நீக்கியிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், ட்விட்டர் ஊழியர்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் தீவிர இடதுசாரிகளுடன் கைகோத்து அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் வெகுண்டெழுந்துள்ளார்.

எதிர்காலத்தில் தனது சொந்தக் கருத்துகளைச் சுதந்திரமாகப் பதிவு செய்யும் வகையில், சொந்த சமூக வலைதளத்தை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார். ட்ரம்ப்பின் இந்த ட்வீட்களும் நீக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x