Last Updated : 29 Oct, 2015 05:37 PM

 

Published : 29 Oct 2015 05:37 PM
Last Updated : 29 Oct 2015 05:37 PM

சவுதியில் சிறை, 1,000 கசையடி தண்டனை பெற்ற எழுத்தாளருக்கு ஐரோப்பிய யூனியன் விருது

தனது எழுத்துக்கள் மூலம் இணையதளத்தில் இஸ்லாம் மதகுருமார்களை நிந்தனை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு 10 ஆண்டு சிறை, மற்றும் 1,000 கசையடித் தண்டனை பெற்ற ரைஃப் பதாவி என்ற எழுத்தாளர் ஐரோப்பிய யூனியன் மனித உரிமைகள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கு வயது 31 என்பது குறிப்பிடத்தக்கது.

ஃப்ரீ சவுதி லிபரல்ஸ் என்ற இணையதளத்தை தொடங்கி எழுத்துரிமை, பேச்சுரிமை, கருத்துரிமைகளை வலியுறுத்திய செயல்பாட்டாளர் ரைஃப் பதாவி இஸ்லாமிய மதகுருமார்களை நிந்தனை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு 2012-ம் ஆண்டு சவுதியில் கைது செய்யப்பட்டார்.

2013-ம் ஆண்டு இவருக்கு 7 ஆண்டு சிறையும், 600 கசையடியும் அளிக்க தீர்ப்பளிக்கப்பட்டது. மீண்டும் 2014-ம் ஆண்டு 10 ஆண்டுகள் சிறையும் 1,000 கசையடி வழங்கவும் தீர்ப்பளிக்கப்பட்டது.

கசையடி தண்டனையை 20 வார காலக்கட்டத்தில் நிறைவேற்ற வேண்டும். முதல் 50 கசையடிகள் ஜனவரி 9, 2015-ல் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் பதாவியின் உடல் நிலை மோசமடைந்ததால் கசையடி தண்டனை தள்ளி வைக்கப்பட்டது.

பதாவி உயர் ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டவர், இந்த தண்டனைகளுக்குப் பிறகு அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஜூன் 2015-ல் சவுதி அரேபிய உச்ச நீதிமன்றம் அவரது 10 ஆண்டு சிறை மற்றும் 1,000 கசையடிகள் தண்டனையை உறுதி செய்தது.

இவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறித்து கருத்து தெரிவித்த ஆம்னெஸ்டி அமைப்பு, இவரை, ‘மனசாட்சியின் கைதி’ என்றது. பேச்சுரிமை, கருத்துரிமைக்காக அமைதியான வழியில் முயன்றதற்காக சிறைத் தண்டனை என்று வர்ணித்தது.

இந்நிலையில் ஐரோப்பிய யூனியனின் மதிப்புக்குரிய மனித உரிமைகளுக்கான சகரோவ் விருது இவருக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விருது 1988-ம் ஆண்டு மனித உரிமைகளைக் காக்கும், அடிப்படை சுதந்திரங்களுக்காக போராடும் மக்கள், அமைப்பு ஆகியவற்றுக்கு வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x