Published : 28 Dec 2020 01:04 PM
Last Updated : 28 Dec 2020 01:04 PM
புத்தாண்டு விடுமுறைகளுக்குப் பிறகு அமெரிக்காவில் கரோனா பரவல் மோசமானதாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க நோய்த் தடுப்புப் பிரிவு விஞ்ஞானிகள் கூறும்போது, “நாங்கள் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு ஒன்றை வலியுறுத்துகிறோம். புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு கரோனா தொற்று அதிகரிக்கலாம். நாம் இதில் கவனமாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.
''அமெரிக்கா மிகப் பெரிய சவாலை எதிர் கொண்டுள்ளது. கரோனா தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டபோதிலும் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்கர்கள் கவனமாக இருக்க வேண்டும். நான் கரோனா தடுப்பு மருந்தின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளேன். மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும்.
தடுப்பு மருந்தை மக்களிடம் சென்றடையும் முயற்சியில் தீவிரமாக இருக்க வேண்டும். அதிகமான மருத்துவப் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும்'' என்று ஜோ பைடன் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பு மருந்தைப் போட்டுக் கொண்டார்.
ஃபெடெக்ஸ் மற்றும் யுபிஎஸ் நிறுவனங்கள் மூலம், நாட்டிலுள்ள ஒவ்வொரு மாகாணத்துக்கும் கரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பும் முயற்சியைத் தொடங்கியுள்ளோம் என்று அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி நியூயார்க் நகரில் அமைந்துள்ள மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய செவிலியருக்கு முதன்முதலாகக் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.
மேலும், மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக அமெரிக்கத் தலைவர்கள் பலரும் கரோனா தடுப்பு மருந்தைப் பெற்று வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT