Published : 07 Oct 2015 10:56 AM
Last Updated : 07 Oct 2015 10:56 AM
நாம் முன்பு குறிப்பிட்ட நிலவரம் இந்த ஆண்டு ஜூலை 20 அன்று மேலும் மோசமடைந்தது.
துருக்கி - சிரியா எல்லையில் உள்ளது சுருக் என்ற பகுதி. குர்துகள் அதிகம் வசிக்கும் இந்தப் பகுதியில் ஐ.எஸ்.தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவன் தன் உடலில் வெடிகுண்டை இயங்க வைத்துக் கொண்டு 32 பேரை மேலுலகுக்கு அனுப்பிவிட்டு தானும் போய்ச் சேர்ந்தான்.
ஐ.எஸ்.அமைப்புதான் இதற்குக் காரணம் என்பது தெரிந்தாலும் துருக்கி அரசு ஐ.எஸ்.உடன் மறை முக பேரம் பேசி குர்துகள் வசிக்கும் பகுதிகளைக் குறிவைத்திருக்கிறது என்கிறார்கள் குர்துகள்.
இதற்கு இரண்டு நாட்கள் கழித்து இரு துருக்கிய காவல் துறையினரை குர்து புரட்சியாளர் கள் கொன்றார்கள். சுருக் வெடி குண்டு நிகழ்ச்சிக்கு இந்த இருவரும் உடந்தை என்பதுதான் காரணமாம். ஆனால் அதே சமயம் ஐ.எஸ். தீவிரவாதிகள் துருக்கிய ராணு வத்தோடு போரில் ஈடுபட்டிருக் கிறார்கள்.
அமெரிக்காவின் போர்த் தளவாடங்களை துருக்கி கேட்க, அமெரிக்கா இதில் தாராளம் காட்டி வருகிறது.
துருக்கியின் அதிபர் எர்டோகன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. நீதிமன்றத்தை முடக்க முயற்சிக்கிறார் என்றும் இணையதள வசதிகளை சென்சார் செய்கிறார் என்றும் அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப் படுகின்றன. “இன்னமும் தெளி வாகவும் வெளிப்படையாகவும் ஐ.எஸ்.அமைப்புக்கு எதிராக துருக்கி குரல் கொடுக்க வேண்டும். ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான கூட்டணியில் சேர்ந்துவிட வேண்டும்’’ என்றெல்லாம் ஐரோப் பிய நாடுகள் எண்ணுகின்றன. இரண்டு மாதங்களுக்குமுன் நடைபெற்ற தேர்தலில் எர்டோகன் கட்சியால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற முடியவில்லை. கூட்டணிக்கு முயற்சி எடுத்துக் கொண்டார். என்றாலும் சீக்கிரமே இன்னொரு தேர்தலை சந்திக்க வேண்டியது தான் என்கிற அளவுக்கு ஆட்டம் காண்கிறது அவரது கட்சி. அதே சமயம் துருக்கியின் பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்க அவர் என்ன முயற்சிகளை எடுக்கப் போகிறார் என்பதும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.
எர்டோகன் துருக்கியின் 12வது அதிபர். 1994லிலிருந்து 1998 வரை இஸ்தான்புல் நகரின் மேயராக பதவி வகித்தவர். 2002, 2007, 2011 ஆகிய மூன்று பொதுத் தேர்தல் களில் தனது நீதி மற்றும் வளர்ச்சிக் கட்சியை வெற்றி பெறச் செய்தவர்.
சிறந்த கால்பந்து வீரர் இவர். வெளிப்படையாகவே தீவிர இஸ்லாமிய பாணி அரசியலை விமர்சனம் செய்தவர்.
சமீபகாலத்தில் பெரும் கலவரம் கிழக்கு துருக்கியில் தொடங்கியது. அரசும் குர்து தீவிரவாதிகளும் கடுமையாக மோதிக் கொண்டனர். பின்னர் நாட்டின் பிற பகுதிகளுக்கும் வன்முறை பரவியது.
செப்டம்பர் 6 அன்று குர்து போராளிகள் சாலைகளில் வீசிய வெடிகுண்டினால் 30 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இதற்குப் பதிலடியாக கைகளில் தேசியக் கொடியை ஏந்தியபடி துருக்கிய தேசியவாதிகள் குர்து களின் அலுவலகங்கள் மீது தாக்கு தல் நடத்தினர். அங்காராவில் இருந்த அவர்களின் அலுவலகத் துக்குத் தீ வைத்தனர். சிறு சிறு வணிக இடங்களெல்லாம் தீக்கு இரையாகின.
ஊடகங்களும் தப்பிவிட வில்லை. அதிபர் எர்டோஜெனின் பேச்சுகளைத் திரித்து வெளியிட்ட தாக குற்றம் சாட்டப்பட்டு ஹுரியத் என்ற நாளிதழின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
சிஸெர் என்ற சிறு நகரில் 10 பேர் கொலை செய்யப்பட, அங்கு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. அங்குள்ள ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் ராணுவ அதிகாரி கள் புகுந்து தீவிரவாதிகள் குறித்த சோதனைகளை நடத்துகிறார்கள்.
நடப்பதைப் பார்த்தால் போன வருட அமைதிப் பேச்சுவார்த் தைக்கு அர்த்தமே இல்லை என்று தோன்றுகிறது. அந்தப் பேச்சு வார்த்தை முடிவடைந்த கையோடு இருதரப்பினருமே போருக்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கி விட்டார்கள் என்று தோன்றுகிறது.
முன்பெல்லாம் குர்து புரட்சி யாளர்கள் கிராமங்களையும், சிறு நகரங்களையும்தான் குறிவைத் தார்கள். இப்போதெல்லாம் அவர் களின் முக்கிய இலக்கு நகரங்கள் என்றாகிவிட்டது.
இளைய குர்துகள் என்று அழைக்கப்படும் வயது குறைந்த போராளிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இவர்கள் போர் தந்திரங்களில் உரிய பயிற்சி பெற்றதில்லை. ஆனால் ஆக்ரோ ஷம் மிக்கவர்களாக இருக்கிறார் கள். இவர்களுக்கு பேச்சுவார்த்தை களில் நம்பிக்கை கிடையாது.
துருக்கிய அரசு தனது முக்கிய எதிரியாக யாரை எண்ணுகிறது? . “ஐ.எஸ். தான் தனது முக்கிய எதிரி எனக் கருதி, அமெரிக்க உதவி யுடன் ஐ.எஸ்.ஸுடன் மோதும், குர்து எதிர்ப்பாளர்களை கடும் எச்சரிக்கையோடு நிறுத்திக் கொள் ளும்’’ என்கின்றனர் ஒரு சாரர். வேறு சிலரோ “ஐ.எஸ். மீது குறைந்த பட்ச நடவடிக்கைகளை எடுத்து விட்டு, குர்துகளைத்தான் தனது முக்கிய எதிரிகளாகக் கருதி துருக்கி அரசு செயல்படும்’’ என்கிறார்கள்.
அதிபர் எர்டோகனின் இந்தச் செயல்களுக்கு அரசியல் பின்னணி உண்டு. இந்த ஜூன் மாதம் நடை பெற்ற தேர்தலில் அவரது கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான் மையை இழந்துவிட்டது. இதற்கு ஒரு முக்கிய காரணம் குர்துகளுக்கு ஆதரவான ஒரு கட்சி கணிசமான இடங்களைப் பிடித்ததுதான். எனவே தீவிரவாதத்தை (ஐ.எஸ்) எதிர்ப்பதைவிட அரசியல் எதிரி களை (குர்துகள்) ஒழிப்பதற்கு அதிபர் முன்னுரிமை காட்டினால் அது வியப்பதற்கு இல்லை.
(உலகம் உருளும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT