Published : 01 Oct 2015 11:16 AM
Last Updated : 01 Oct 2015 11:16 AM
சமீப காலமாக குர்துகள் தங்கள் பகுதிகளில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். ஒருபுறம் துருக்கியில் தன்னாட்சி கேட்டுப் போராட்டம். மறுபுறம் ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான போராட்டம். இன்னொரு புறம் இராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் உண்டாகியுள்ள பதற்ற நிலைக்குத் தங்களாலான பங்களிப்பு.
இராக்கில் குர்துகளுக்கு ஒரு தனி கவுரவம் உண்டு. அந்த நாட்டில் அராபிக் மொழியோடு குர்திஷ் மொழிக்கும் அதிகாரபூர்வ அந்தஸ்து உண்டு.
நடைமுறையில் பெரும்பாலான குர்துகளுக்கு இரண்டு மொழிகளாவது தெரிந்திருக்கிறது. ஒன்று குர்திஷ், மற்றொன்று அவர்கள் வசிக்கும் நாட்டின் பெரும்பான்மை மொழி. அந்தவிதத்தில் துருக்கியிலுள்ள பள்ளிக் கூடங்களில் படிக்கும் குர்து மாணவர்கள் தங்கள் இரண்டாவது மொழியாக துருக்கிய மொழியைத் தேர்வு செய்கிறார்கள்.
குர்துகள் எண்ணிக்கையில் மிக அதிகம் வசிப்பது துருக்கியில். மக்கள்தொகையில் சுமார் 25 சதவீதம். குர்துகள் அதிகம் வசிக்கும் அடுத்தடுத்த நாடுகளாக இராக், ஈரான், சிரியா ஆகியவற்றைக் கூறலாம். கொஞ்சம் வியப்பான ஒரு தகவலும் உண்டு. இந்த நாடுகளை விட்டுவிட்டால் குர்துகள் மிக அதிகமாக வசிப்பது வேறு ஏதோ இஸ்லாமிய நாட்டில் அல்ல, ஜெர்மனியில்!
தங்களுக்கென்று ஒரு தனி நாடு வேண்டும். அல்லது குறைந்தபட்சம் சுயாட்சி அந்தஸ்தோடு கூடிய பகுதி வேண்டுமென்று குர்து இனத் தவர் அழுத்தமாக நினைக்கத் தொடங்கியது முதலாம் உலகப் போருக்குப் பிறகு எனலாம். அதற்கு முன்னால் ஒட்டாமன் சாம்ராஜ்யம் குர்துகளை பயமுறுத் தியே தனது பிடிக்குள் வைத்தி ருந்தது. முதலாம் உலகப்போரைத் தொடர்ந்து ஒட்டாமன் சாம்ராஜ்யம் ஒரு முடிவுக்கு வந்தது. துருக்கியில் கூட மதச்சார்பின்மைக்கு முக்கியத் துவம் தரப்பட்டது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு துருக்கி குடியரசில் தங்கள் பகுதி களுக்கு சுயாட்சி தேவையென்று கொடிபிடிக்கத் தொடங்கினார்கள் குர்துகள்.
இதெல்லாம் இளம் துருக்கி யர்கள் என்று அழைக்கப்பட்ட பிரிவினருக்குப் பிடிக்கவில்லை. போர் என்று வந்தால் குர்துகள் ரஷ்யாவின் பக்கம்தான் சாய் வார்கள் என்றும் இவர்கள் கருதி னார்கள். எனவே நாட்டின் முக்கியப் பகுதிகளில் குவிந்திருந்த குர்து களை பல்வேறு எல்லைப் பகுதி களில் படரவிட்டனர். இப்படி இடம் மாற வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாயினர் மூன்று லட்சம் குர்துகள். இதன் காரணமாக குர்து இனத்தைச் சேர்ந்த பலரும் வழிவழியாக வைத்திருந்த தங்கள் முன்னோர்களின் நிலங்களை குறைந்தபட்ச விலைக்கு விற்று விட்டுச் செல்லும்படி ஆனது. முதலாம் உலகப்போர் முடிவடை வதற்குள் சுமார் ஏழு லட்சம் குர்துகள் இப்படி கட்டாயமாக பிற பகுதிகளுக்கு மாற்றி குடியேற வைக்கப்பட்டார்கள்.
இராக்கில் குர்துகள் பெரும் புரட்சிகளில் ஈடுபட, துருக்கிக்கும் கவலை வந்தது. குர்துகள் அதிகம் வசிக்கும் துருக்கியப் பகுதிகளில் ராணுவச் சட்டத்தை அமலுக்குக் கொண்டு வந்தது. குர்துகள் இடமாற்றத்தை மேலும் தீவிரமாக்கியது. குர்துகள் அதிகம் தங்கும் பகுதிகளில் தங்குவதற்கு அல்பேனியா மற்றும் அசிரியா நாட்டு அகதிகளை அனுமதித்தது.
இந்தக் காரணங்களினால் துருக் கிக்கும், குர்துகளுக்கும் உள்ள இடைவெளி மிகவும் அதிகமானது. இருதரப்பிலும் நம்பிக்கையும், அவநம்பிக்கையும் மாறி மாறி உண்டானது. போராட்டங்களும், அமைதிப் பேச்சு வார்த்தைகளும் மாறி மாறி நடந்து தங்கள் அர்த்தத்தை இழந்து நின்றன.
1922 1924ல் இராக்கில் குர்து களுக்கு சுயாட்சி அந்தஸ்து கொடுக்க குர்திஸ்தான் என்ற ராஜ்யம் உருவானது. ஆனால் 1970ல் குர்துகள் தங்கள் நோக்கங்களை விரிவுபடுத்திக் கொண்டார்கள். சுயாட்சி போதாது. முழு சுதந்திரம் பெற்ற நாடாக இருக்க வேண்டும் என்றனர். அதுமட்டுமல்ல இராக்கில் உள்ள பெட்ரோல் வளம் நிரம்பிய கிர்குக் என்ற பகுதியும் தங்களது வருங் கால தேசத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று போராடத் தொடங்கினார்கள்.
குர்திஸ்தான் என்பது இராக்கின் ஒருபகுதி மட்டுமல்ல. அது நான்கு தேசங்களின் சில பகுதிகளை இணைத்து உருவாக்கப்பட்ட குர்துகளின் கனவு தாகம்.
விரிவான குர்திஸ்தான் (Greater Kusthisthan) என்ற பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதாவது பல்வேறு நாடுகளில் அருகருகே அதிக அளவில் குர்துகள் வசிக்கும் பகுதி. இதன்படி பார்த்தால் வடக்கு குர்திஸ்தான் என்பது தென்கிழக்கு துருக்கியின் சில பகுதிகள். மேற்கு குர்திஸ்தான் என்பது சிரியாவின் வடக்குப் பகுதி, தெற்கு குர்திஸ்தான் என்பது இராக்கின் வடபகுதி, கிழக்கு குர்திஸ்தான் என்பது ஈரானின் மேற்குப் பகுதி.
(உலகம் உருளும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT