Published : 08 Oct 2015 12:32 PM
Last Updated : 08 Oct 2015 12:32 PM
ஆப்கானிஸ்தானின் வடக்கே குண்டுஸ் மருத்துவமனையில் தவறுதலாக ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா மன்னிப்புக் கோரியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் வடக்கே குண்டூஸ் நகரில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட விமான தாக்குதலில் 22 பேர் பலியானார்கள். இந்தத் தாக்குதல் அமெரிக்கா தலைமையிலான கூட்டுபடையை சேர்ந்த விமானத்தால் நடத்தப்பட்டது.
குண்டூஸ் நகரில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதல் தவறுதலாக நடந்துவிட்ட சம்பவம் என்று ஆப்கானுக்கான அமெரிக்க ஜெனரல் ஜோன் எப் காம்ப்பெல் நேற்று (புதன்கிழமை) தெரிவித்திருந்தார்.
இதற்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்தத் தாக்குதலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா.
தாக்குதல் நடத்தப்பட்ட மருத்துவமனையில் பணியாற்றி வரும் 'எல்லைகளற்ற மருத்துவர் குழு' என்ற தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் ஜோயேன் லியூவை அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
அப்போது மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு மன்னிப்பு கோரி பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, இனி இதுபோன்ற சம்வவங்கள் நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
இதனை வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் ஏர்னெஸ்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் தாக்குதல் சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்த ஒபாமா உத்தரவிட்டதாகவும் அவர் கூறினார்.
ஒபாமா மன்னிப்பு கோரியதை உறுதி செய்துள்ள 'எல்லைகளற்ற மருத்துவர் குழு', 22 அப்பாவி மக்களை பலி கொண்ட தாக்குதலுக்கு மன்னிப்பு கோருவது மட்டும் நியாயமாகாது என்று குறிப்பிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT