Published : 21 Dec 2020 04:54 PM
Last Updated : 21 Dec 2020 04:54 PM
கரோனா வைரஸின் புதிய வகையால் தென் ஆப்பிரிக்காவில் புதிதாகத் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கரோனா வைரஸைவிட இந்தப் புதிய வைரஸ் மிகுந்த வீரியம் கொண்டதாக இருக்கிறது என மருத்துவர்கள் கவலை கொள்கின்றனர்.
அதிலும் இளைஞர்கள் மத்தியில் இந்த வைரஸ் வேகமாகப் பரவி பாதிப்பை ஏற்படுத்தும் அச்சம் இருப்பதாக மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனால் நாளுக்கு நாள் வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து, மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வருவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது என்று தென் ஆப்பிரிக்க அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸுக்கு 501.வி2 என்று பெயரிடப்பட்டுள்ளது. புதிதாகப் பாதிக்கப்படுவோர் மத்தியில் இந்த வைரஸின் தாக்கமே அதிகரித்துக் காணப்படுகிறது என்று மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
தென் ஆப்பிரிக்க சுகாதாரத்துறை அமைச்சர் ஜெலி மெகிஸி கூறுகையில், “கரோனா வைரஸைவிட, இந்த வைரஸின் பாதிப்பும், பரவும் வேகமும் அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது. தென் ஆப்பிரிக்காவில் 2-ம்கட்ட அலை உருவாகியுள்ளதாக நினைக்கிறோம். இப்போது தொடக்க நிலையில்தான் இருக்கிறது.
எங்களுக்குக் கிடைத்துவரும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், முதல் அலையில் வைரஸ் பரவிய அளவைவிட 2-ம் அலையில் அதிவேகமாக வைரஸ் பரவுகிறது. 2-ம் அலையில் உயிரிழப்பு அதிகரிக்குமா அல்லது இருக்காதா என்பது உறுதியாகத் தெரியவில்லை. இளைஞர்கள் இந்த வைரஸில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இளைஞர்கள் அதிகமாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். சில நேரங்களில் உயிரிழப்பும் நேரக்கூடும்” எனத் தெரிவித்தார்.
தென் ஆப்பிரிக்க அரசின் மருத்துவ ஆலோசனைக் குழுவின் பேராசிரியர் சலிம் அப்துல் கரிம் கூறுகையில், “இது தொடக்க நிலைதான். இந்த நிலையில் கிடைத்துவரும் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், முதல் அலையைவிட 2-வது அலை வேகமாகப் பரவக்கூடும் எனத் தெரிகிறது. புதிய வைரஸ் அலையில் அதிகமானோர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது முதல் அலையில் இருந்ததைவிட அதிகமாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஆகஸ்ட் மாதம் நாள்தோறும் 8,300 பேர் புதிதாக கரோனாவில் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்றைய நிலவரப்படி மீண்டும் 8,500 பேர் பாதிப்பு என்ற நிலைக்குத் திரும்பியுள்ளது.
தென் ஆப்பிரிக்க அரசின் மருத்துவ ஆலோசனைக் குழுவின் உறுப்பினரும், பேராசிரியருமான இயான் சானே கூறுகையில், “தொடக்க நிலையில் இந்த வைரஸைப் பார்க்கிறோம். அதிவேகமாகப் பரவுகிறது. எதிர்பார்த்ததை விட வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளது. பிரிட்டனில் இருக்கும் வைரஸைவிட இந்த வைரஸ் வேறுபட்டதாக உள்ளது.
அசல் கரோனா வைரஸைவிட இந்த வைரஸ் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் இருக்கிறது. இந்தப் புதிய வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியுமா என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் சார்பில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்து தற்போது கிளினிக்கல் பரிசோதனையில் இருந்து வருகிறது. அதுவரை மக்கள் முகக்கவசம், சமூக விலகலைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அரசு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மது விற்பனை சில மணி நேரத்துக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளன. கடற்கரைப் பகுதிக்கு மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT