Published : 07 Dec 2020 02:17 PM
Last Updated : 07 Dec 2020 02:17 PM
செயற்கைக்கோளால் கட்டுப்படுத்தப்படும் ஆயுதங்களால் அணுகுண்டு ஆய்வுத்துறையின் தந்தை மொஹ்சென் ஃபக்ரிசாதே கொல்லப்பட்டதாக ஈரான் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து ஈரான் புரட்சிப் படையின் துணைத் தளபதி அலி ஃபதாவி கூறும்போது, “ தலைநகரின் கிழக்கே ஒரு நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தபோது மொஹ்சென் ஃபக்ரிசாதே கொல்லப்பட்டார். அவரைச் செயற்கைக்கோள்களால் கட்டுப்படுத்தப்படும் ஆயுதத்தைப் பயன்படுத்திக் கொன்றுள்ளனர். இதனை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுகுண்டு ஆய்வுத்துறையின் தந்தை மொஹ்சென் ஃபக்ரிசாதே நவம்பர் 27ஆம் தேதி கொல்லப்பட்டார். இதன் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
மொஹ்சென் ஃபக்ரிசாதே கடந்த 27ஆம் தேதி தெஹ்ரானில் 80 கிலோ மீட்டர் தொலைவில் அப்சார்ட் பகுதியில் காரில் சென்று கொண்டிருக்கும்போது துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார். இந்தப் படுகொலை ஈரானைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
முதலில் இக்கொலையை துப்பாக்கிய ஏந்திய நபர்கள் செய்ததாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இத்தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாகவும், இதன் காரணமாகத்தான் மேற்கத்திய நாடுகள் இந்தப் படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்க மறுத்துவிட்டன என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் இந்தச் செயலுக்கு அந்நாடு கடுமையான விளைவுகளைச் சந்திக்கும் என்றும் ஈரான் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இதுகுறித்த எந்த ஆதாரத்தையும் ஈரான் வெளியிடவில்லை.
ஈரானில் ஆணு ஆயுதப் புரட்சியில் முக்கியப் பங்காற்றியவர் மொஹ்சென் ஃபக்ரிசாதே. இதன் காரணமாகவே அவர் ஈரானின் அணுகுண்டு ஆய்வுத் துறையின் தந்தை என்று அழைக்கப்பட்டு வந்தார்.
மொஹ்சென் ஃபக்ரிசாதே படுகொலை தொடர்பாக இஸ்ரேல் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT