Last Updated : 22 Oct, 2015 02:25 PM

 

Published : 22 Oct 2015 02:25 PM
Last Updated : 22 Oct 2015 02:25 PM

கண்மூடித்தனமாக உண்பது, மது அருந்துவது கூடாது: கட்சி உறுப்பினர்களுக்கு சீனா தடை

அளவுக்கதிகமாக சாப்பிடுவது மற்றும் கண்மூடித் தனமாக மது அருந்துவது, முறையற்ற பாலியல் நடவடிக்கை மற்றும் கால்ஃப் ஆடுவது ஆகியவற்றுக்கு தங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி தடை விதித்துள்ளது.

தூய்மையான நிர்வாகம் மற்றும் நிபந்தனையற்ற ஒழுக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி கட்சியின் பொலிட் பீரோ இந்த புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.

இந்த விதிமுறைகள் மிகவும் கண்டிப்பானவை என்று சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 88 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட சீன கம்யூனிஸ்ட் கட்சி, மேலும் தெரிந்தவர்களுக்கு கட்சி சார்பாக சலுகை காட்டுவதையும் கண்டிப்புடன் அணுகும் என்று தெரிவித்துள்ளது.

2012-ம் ஆண்டு ஸீ ஜின்பிங் அங்கு அதிபராகப் பொறுப்பேற்றது முதல் ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதில் ஆயிரக்கணக்கான அதிகாரிகள் சிக்கி பதவியையும் உடைமைகளையும் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கால்ஃப் விளையாடுவது, அளவுக்கு அதிகமாக உண்ணுதல் மற்றும் மது அருந்துதல் இனி கட்சி ஒழுக்கத்தை மீறிய செயலாகவே கருதப்பட்டு தகுந்த தண்டனை வழங்கப்படும் என்று செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.

விதிமுறைகளை மீறும் கட்சி உறுப்பினர்களுக்கான தண்டனை பற்றி இந்த விதிமுறைகளில் வெளிப்படையாக எதுவும் இல்லை, ஆனால் கட்சியின் உள் ஒழுக்க நடவடிக்கைகள் அச்சமூட்டக் கூடியவை என்பது உலகம் அறிந்ததே. அதாவது சீன குற்றச் சட்டத்தையும் கடந்தது கட்சி ஒழுக்கம் என்பது.

கால்ஃப் ஆட்டம் நிறைய பணத்துடனும், மேற்கத்திய மேட்டுக்குடியினர் பழக்க வழக்கங்களுடன் ஒப்பிடப்பட்டு வரும் சீனாவில் தற்போது கட்சி மட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x