Published : 19 Oct 2015 07:04 PM
Last Updated : 19 Oct 2015 07:04 PM
ஆப்கானில் அமைதி, பயங்கரவாத முறியடிப்பு குறித்த பாகிஸ்தான் செயல்பாடுகள், தாலிபான் விவகாரம் ஆகியவை குறித்து அமெரிக்க அழுத்தம் காரணமாக விவாதிக்க அமெரிக்கா புறப்பட்டார் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்.
தாலிபானை பேச்சுவார்த்தை மேஜைக்கு அழைத்து வருவதற்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நெருக்கடி கொடுத்து வருகிறது. ஆப்கானில் பலம்பெற்றுள்ள தாலிபானை எதிர்த்துப் போராடும் ஆற்றல் ஆப்கன் ராணுவத்துக்கு இல்லை என்பதால், அமெரிக்கா தனது படைகளை திரும்ப அழைக்கும் முடிவை தள்ளி வைத்தது.
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., தாலிபான் தீவிரவாதிகளை ஆதரிப்பதாகவும், பாகிஸ்தான் அரசு இது குறித்து கையாலாகத்தனத்துடன் இருந்து வருவதாகவும் கடும் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் ஐ.எஸ்.ஐ. அமைப்பைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நவாஸ் ஷெரீப் அமெரிக்க பயணம் குறித்து அரசியல் ஆய்வாளர் ஹசன் அஸ்காரி கூறும்போது, “நவாஸ் வருகை மீது அமெரிக்காவுக்கு 2 குறிக்கோள்கள் உள்ளன. ஒன்றும் ஆப்கானிஸ்தான் தாலிபான்களை பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் சம்மதிக்க வைப்பது, இரண்டாவது பாகிஸ்தானில் ஆப்கான் தாலிபான்களின் நடவடிக்கைகளை முடக்க நடவடிக்கை மேற்கொள்வது” என்றார்.
9/11 தாக்குதலுக்குப் பிறகே தாலிபான்களை வளர்த்து விடும் தங்களது செயல்பாடுகளை பாகிஸ்தான் கட்டுப்படுத்தியது. ஆனால் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு பாகிஸ்தானில் தாலிபான்கள் நடவடிக்கைகளை ஊக்கப்படுத்துவதாக அமெரிக்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
ஆப்கான் அரசும் அமெரிக்காவின் இந்தச் சந்தேகத்தை பகிர்ந்து கொண்டுள்ளது. அதாவது பாகிஸ்தானிலிருந்து எல்லை தாண்டி ஆப்கானில் தாலிபான்கள் தாக்குதல் நடத்துவதன் மீது பாகிஸ்தான் அரசுக்கு எந்த வித பிடிமானமும் இல்லை என்பதும் ஆப்கானின் குற்றச்சாட்டு என்பது குறிப்பிடத்தக்கது.
தீவிரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தானுக்கு அமெரிக்கா பல பில்லியன் டாலர்கள் தொகையை உதவியாக வழங்கி வருகிறது. இதுவரை 4.6 பில்லியன் டாலர்கள் உதவி வழங்கியுள்ளது அமெரிக்கா, மேலும், 2016ம் நிதியாண்டில் 794 மில்லியன் டாலர்கள் உதவித் தொகையும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளிக்கவுள்ளது.
இந்நிலையில் தாலிபான்கள் மற்றும் மற்ற தீவிரவாதத்தினை ஒழிக்க அமெரிக்கா பாகிஸ்தானுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் நவாஸ் ஷெரீப் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திக்க அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT