Published : 19 Oct 2015 05:55 PM
Last Updated : 19 Oct 2015 05:55 PM
ஹங்கேரி எல்லை மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கான அகதிகள் குரோஷியா எல்லை பகுதியில் கடும் குளிரில் தவித்து வருகின்றனர். இதே நிலை நீடித்தால் பெரும் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சிரியா, இராக் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து தினம்தோறும் ஏராளமான அகதிகள் அடைக்கலம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு படையெடுத்து வருகின்றனர். கடல்வழியாக கிரீஸ் நாட்டை அடையும் அவர்கள் மாசிடோனியா வழியாக பிற ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சமடைந்து வருகின்றனர்.
ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனி மட்டும் அகதிகளை தாராளமான ஏற்று வருகிறது. மற்ற நாடுகள் முள்வேலி அமைத்து தீவிரமாகக் கண்காணிப்பை கட்டவிழ்த்து விட்டுள்ளது. பிற நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், குறைந்த எண்ணிக்கையிலும் தங்கள் எல்லைக்குள் அகதிகள் அனுமதித்து வருகிறது. இந்நிலையில் ஹங்கேரி அரசு குரோஷியா நாட்டுடனான தனது எல்லையை திடீரென மூடிவிட்டது.
இதனால் அகதிகளில் பலர் குரோஷியா எல்லைப் பகுதியில் தேங்கியுள்ளனர். அங்கு கடும் குளிர் நிலவி வருவதால் அகதிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குளிரை தாக்கும் அளவுக்கு உடைகளும் அவர்களிடம் இல்லை. பாலித்தீன் பைகள் உள்ளிட்டவற்றையே பலர் போர்வையாக பயன்படுத்தி வருகின்றனர்.
ஹங்கேரியை கடந்த செல்ல முடியாமல் குரோஷிய எல்லையில் இதுவரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர். அவர்களில் பலர் கடும் குளிரை தாக்க முடியாமல் சாலையோரங்களிலும், மரத்தின் அடியிலும் பாலித்தீன் பைகளுக்குள் சுருட்டுபடுத்துள்ளனர். இதேநிலை மேலும் சில நாட்கள் நீடித்தால் குளிரால் பல அகதிகள் இறந்து விடும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே பல அகதிகள் கடல் வழியாக வரும்போது படகு விபத்துக்குள்ளாகி இறந்து வருகின்றனர். இப்போது குளிரும் அவர்களது துயரத்தை அதிகரித்துள்ளது. உயிரிழப்பு அபாயமும் ஏற்பட்டுள்ளது.
குரோஷிய எல்லையில் உள்ள அகதிகளை ஸ்லோவேனியா, ஆஸ்திரியா நாடுகள் வழியாக திருப்பி விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது சற்று நீண்ட பயணமாகும். மேலும் சிறிய நாடான ஸ்லோவேனியா நாள் ஒன்றுக்கு 1000 அகதிகளையும், ஆஸ்திரியா 1,500 அகதிகளையுமே அனுமதித்து வருகிறது. இதனால் குரேஷிய எல்லையில் அகதிகள் அதிகரித்து வருகிறது. இதேபோல செர்யா எல்லையில் இருந்து ஹங்கேரியை கடக்கவும் ஏராளமான அகதிகள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் எல்லையை மூடிவிட்ட ஹங்கேரியை ஐ.நா. அகதிகள் பாதுகாப்பு பிரிவு கண்டித்துள்ளது. ஏற்கெனவே பிரச்சினையில் உள்ள அகதிகளை குளிரில் தவிக்க விட்டு அவர்களை ஹங்கேரி துன்புறுத்தி வருகிறது என்று ஐநா அகதிகள் பாதுகாப்பு பிரிவு கூறியுள்ளது.
அகதிகள் ஆதரவு மேயர் வெற்றி
ஜெர்மனியில் அகதிகளை அனுமதிப்பதற்கு ஆதரவாக செயல்பட்டதால் கத்தியால் குத்தப்பட்ட பெண் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளைத் தேடி வரும் அகதிகளை ஜெர்மனி அரசு அதிக அளவில் ஏற்றுக் கொண்டு வருகிறது. ஆனால் அதற்கு அங்கு எதிர்ப்பும் உள்ளது. கோல்ன் நகர பெண் மேயர் ஹென்ரிட்டி ரீகர், அகதிகளை ஏற்பதற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அவரை ஒருவர் கத்தியால் குத்தினார்.
அவரது அகதிகள் ஆதரவு நிலைப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிந்து இந்த சம்பவம் நிகழ்ந்தது. படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சைக்குப் பிறகு அவர் உயிர்தப்பினார். இந்நிலையில் தேர்தலில் அவர் வெற்றி பெற்று மீண்டும் மேயராகியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT