Published : 29 Oct 2015 05:07 PM
Last Updated : 29 Oct 2015 05:07 PM
பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த ஒரேயொரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ளும் கொள்கைக்கு சீனா முற்றுப்புள்ளி வைத்தது.
இனி சீன தம்பதியினர் 2 குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என்று சீன கம்யூனிஸ்ட் அரசு முடிவெடுத்துள்ளதாக ஜினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை நாடாகவும், அதேவேளையில் மிகப்பெரிய பொருளாதார நாடாகவும் விளங்கும் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி இது குறித்து 4 நாட்கள் பெய்ஜிங்கில் கூட்டம் நடத்தி விவாதித்தது.
இதனையடுத்து, ஒரு குழந்தை கொள்கைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. ஒரு குழந்தைக் கொள்கைதான் சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டது என்று சீன அரசு இதுகாறும் தெரிவித்து வந்தது.
பல ஆண்டுகளாக 2-வது குழந்தைப் பெற்றுக் கொள்ள இருந்த தடை பலவேளைகளில் மிகவும் வலுக்கட்டாயமாக கையாளப்பட்டது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த ஒரு குழந்தைக் கொள்கையினால் சீன பொருளாதாரம் வளர்ச்சியுற்றதாக அரசு தரப்பினர் கூறிவந்தாலும், இதன் விளைவுகள் இப்போது வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியுள்ளன. வயதானவர்கள் சீனாவில் அதிக அளவில் உள்ளனர், ஆண்-பெண் பாலின விகிதாச்சாரத்தில் கடுமையான சமச்சீரற்ற தன்மை ஏற்பட்டது. மேலும் அதன் உழைக்கும் சக்தி பெருமளவு குறைந்து வருகிறது.
இதனையடுத்து 2013-ம் ஆண்டு குறைந்த அளவில் சலுகைகள் அளிக்கப்பட்டு, நகர்ப்புற தம்பதியினர் 2-வது குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். ஆனால் நிறைய பேர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை.
சீனாவில் உள்ளார்ந்த அமைப்புகளில் திறன் குறைபாடும் பெருமளவு ஒரு குழந்தைக் கொள்கையால் ஏற்பட்டது. இதனையடுத்து பெய்ஜிங்கில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்தாண்டுத் திட்டக் கூட்டத்தில் இது தீவிரமாக விவாதிக்கப்பட்டது.
இதில் சீன பொருளாதார வளர்ச்சி சரிவடையும் வாய்ப்பு பற்றி ஆய்வாளர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
2010-ல் இருந்த நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை 2020-ல் இரட்டிப்பாக்க சீன அரசு கடும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. மிதமான வளம் குறித்து திட்டமிடும் சீனா, அதேவேளையில் அனைவரும் வளமாக வாழ்வதற்குத் தேவை ஆரோக்கியமான உழைப்பு சக்தியே என்று முடிவுக்கு வந்ததையடுத்து ஒரு குழந்தை கொள்கைக்கு முடிவு கட்டியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT