Published : 01 Dec 2020 04:26 PM
Last Updated : 01 Dec 2020 04:26 PM
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத்துக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உரிமைகளுக்காக அமைதியான முறையில் போராடும் இந்திய விவசாயிகளுக்கு கனடா எப்போதும் ஆதரவாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி சலோ என்ற பெயரில் ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்கள் உள்பட பல்வேறு மாநிலங்களைக் சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
6-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டத்தால், டெல்லி எல்லைப் பகுதியில் போக்குவரத்து முடங்கியுள்ளது. பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைத்தபோதிலும், நிபந்தனையற்ற பேச்சுக்கு வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் போராட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. மத்திய அரசின் பேச்சுவாரத்தைக்குச் செல்வது குறித்து இன்று முடிவு எடுப்பதாக விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கனடாவின் டொராண்டோ நகரில் இந்தியர்கள் சார்பில் நடத்தப்பட்ட, சீக்கிய குரு, குரு நானக் தேவின் 551-வது பிறந்தநாள் விழாவில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காணொலி மூலம் இன்று பங்கேற்றார். அப்போது ஜஸ்டின் பேசியதாவது:
“ இந்தியாவில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் குறித்த செய்தியை நான் அங்கீகரிக்காமல் இருந்தால்,நான் பொறுப்பற்றவனாகிவிடுவேன்.
விவசாயிகள் போராட்டத்தை நினைத்து கவலைப்படுகிறேன். விவசாயிகளின் குடும்பத்தார், அவர்களின் நண்பர்கள் குறித்து நான் வேதனைப்படுகிறேன். பெரும்பாலன விவசாயிகளின் உண்மையான நிலை இதுதான் என்பது எனக்குத் தெரியும்.
நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன், உரிமைகளுக்காக நீங்கள் அமைதியாகப் போராடும் போது, அதற்கு கனடா எப்போதும் துணை நிற்கும். பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். அதனால்தான் பலவழிகள் மூலம் உங்கள் கவலைகளை இந்திய அதிகாரிகளுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம்.
கரோனா மற்றும் மற்ற எல்லாவற்றின் காரணமாக நாம் அனைவரும் இந்த ஆண்டில் ஒன்றாக இருக்க வேண்டிய தருணம். இந்த ஆண்டில் நாம் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டிய முக்கியமான நேரம் இதுதான். ஏனென்றால், கரோனா அனைவரையும் பிரித்துவிட்டது. அனைவரும் ஒன்றாக இணைந்து, இந்த குரு நானக் பிறந்தநாளைக் கொண்டாடுவோம்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT