Last Updated : 30 Nov, 2020 04:19 PM

3  

Published : 30 Nov 2020 04:19 PM
Last Updated : 30 Nov 2020 04:19 PM

விடுதலை: 35 ஆண்டுகால சிறை வாழ்க்கையிலிருந்து விடுபட்டது ‘காவன் யானை’: பாகிஸ்தானிலிருந்து கம்போடியா சென்றது

மகிழ்ச்சியுடன் காவன் யானை நேற்று பாகிஸ்தானிலிருந்து கம்போடியாவுக்கு வழியனுப்பி வைக்கப்பட்ட காட்சி: படம் உதவி ட்விட்டர்

இஸ்லாமாபாத்

உலகிலேயே அதிகமான காலம் தனிமையில் வாழ்ந்த யானை எனப் பெயரெடுத்த காவன் யானை, பாகிஸ்தானிலிருந்து கம்போடியாவில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு விமானம் மூலம் நேற்று கொண்டு செல்லப்பட்டது.

கடந்த 1985-ம் ஆண்டு இலங்கையிலிருந்து ஒரு வயதில் பாகிஸ்தானுக்கு கொண்டு வரப்பட்ட காவன் யானை 24 ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்தது. பாகிஸ்தானில் இருக்கும் ஒரே ஆசிய யானை என்பதால், நீண்டகாலம் இஸ்லாமாபாத்தில் உள்ள மர்காசர் உயிரியல் பூங்காவில் மக்களுக்கு காட்சிப் பொருளாக காவன் பயன்பட்டது.

காவனின் தனிமையைப் போக்க 20009-ல் சாஹேலி எனும் பெண் யானை சேர்க்கப்பட்டது. அந்த யானையும் 2012ம் ஆண்டில் உடல்நலக்குறைவால் இறந்தது. கடந்த 8 ஆண்டுகளாக சொல்லமுடியாத துயரத்திலும், கவனிப்பின்றி, சுவற்றில் முட்டி, முட்டி தனிமையை வெளிப்படுத்தி வந்த காவன் நேற்று கம்போடியாவுக்கு விமானத்தில் பறந்தது.

கம்போடியாவில் காவனுக்கு நிச்சயம் தனிமைச் சிறை இருக்கப்போவதில்லை. அங்கு ஆசியாவைச் சேர்ந்த பல யானைகள் இருப்பதால், நிச்சயம் காவன் மகிழ்சியாக வாழப் போகிறது.

கடந்த 2012-ம் ஆண்டு கவானுக்கு துணையாக இருந்த, பெண் யானை சாஹேலி உடல்நலக்குறைவால் உயிரிழந்தபின், கடந்த 8 ஆண்டுகளாக காவன் மிகுந்த துயரத்தில் இருந்தது. காவனின் மனநிலையும், உடல்நிலையும் மிகவும் மோசமானதை அறிந்த பாகிஸ்தான் விலங்குகள் நல அமைப்பு, அமெரிக்க பாடகரும், நடிகையுமான சீர், சர்வதேச விலங்குகள் நலஅமைப்பு முயற்சியால், காவனின் மீதான கவனம் ஏற்பட்டது.

குறிப்பாக ஃபோர் பாஸ் இன்டர்நேஷனல் எனும் விலங்குகள் நல அமைப்பு எடுத்த மிகப்பெரிய முயற்சியால், காவனின் உடல்நிலை சீரடைந்தது. காவனை பாகிஸ்தானிலிருந்து கம்போடியாவுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையையும் எடுக்கப்பட்டது.

கடந்த 6 மாதங்களாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் பலனாக காவன் யானையை கம்போடியாவுக்கு அனுப்ப பாகிஸ்தான் அரசு அனுமதியளித்து. காவன் யானையை க் கொண்டு செல்ல அந்த யானை வசிக்கும் இடத்தின் அருகே புதிய கூண்டு செய்து வைக்கப்பட்டது

நாள்தோறும் சிறிது நேரம் காவன் யானையை அந்த கூண்டுக்குள் அடைத்து பழக்கப்படுத்தப்பட்டது. அந்த கூண்டுக்குள் சென்று வாழ காவன் பழகியதையடுத்து, அந்த கூண்டின் மூலம் காவன் கம்போடியாவுக்கு நேற்று விமானத்தில் பறந்தது.

ஃபோர் பாஸ் இன்டர்நேஷன் அமைப்பின் விலங்குகள் நல மருத்துவரும், காவனை கடந்த 6 மாதங்களாக கவனித்தவருமான அமீர் கலில் கூறுகையில் “ கடந்த 6 மாதங்களாக காவன் யானையை நான்தான் பராமரித்து வருகிறேன். 35 ஆண்டுகளாக தனிமைச் சிறையில் காவன் வாழ்ந்துள்ளது.

அதிலும் 2012-ல் காவனுக்கு துணையாக இருந்த பெண் யானை சாஹேலி இறந்த பின், கடந்த 8 ஆண்டுகள் கொடுமையான தனிமையில் காவன் வாழ்ந்தது. இந்த தனிமையை தாங்க முடியாமல், சுவற்றை முட்டி காவன் நின்றதுதான் உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. சுவற்றை முட்டி, முட்டி மனரீதியாக பாதிக்கப்பட்டு, உடலிலும், மனதிலும் காவனுக்குக் காயங்கள் ஏற்பட்டன.

நான் சிகிச்சையளிக்க வந்தபோது, காவனின் உடலில் ஏராளமான காயங்கள் இருந்தன. உடல் எடையும் கூடியிருந்தது. நான் வந்தபின், காவனின் காயங்கள் குணப்படுத்தப்பட்டு, உடல் எடையும் 450 கிலோ குறைக்கப்பட்டுள்ளது.

35 ஆண்டுகால சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள காவனுக்கு நிச்சயம் கம்போடியாவில் சிறந்த துணை கிடைக்கும், புதிய வாழ்க்கையை வாழும். அமெரிக்க பாடகி சீர், விலங்குகள் நல அமைப்பான ப்ரீ தி வைல்ட், ஃபார் பாஸ், அமெரிக்க எழுத்தாளர் எரிக் மார்கோலிஸ் ஆகியோரின் தீவிரமான முயற்சியால்தான் காவன் பாகிஸ்தானிலிருந்து கம்போடியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டிலேயே காவனை மீட்க நாங்கள் முயற்சித்தோம். ஆனால், முடியவில்லை. சமீபத்தில் பாகிஸ்தான் நீதிமன்றம் உயிரியல் பூங்காவை மூட உத்தரவிட்டபின் எங்கள் பணி வேகமாக நடந்தது. இந்த வனஉயிரியல் பூங்காவில் இருந்து ஏற்கெனவே 30 மிருகங்களை நாங்கள் வேறு நாடுகளுக்கு கொண்டு சென்றுவிட்டோம். இப்போது காவன் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

யானைகள் சமூக விலங்குகள், குடும்பத்துடன், கூட்டமாக வாழக்கூடியவை. அதற்கு தனிமை வாழ்க்கை என்பது நரகமாக, சிறையாக இருக்கும். வனத்தின் தூதுவர்கள் யானைகள்தான், தூதுவர்களைப் போல் வாழவே யானைகள் தகுதியானவை”

இவ்வாறு கலீல் தெரிவித்தார்.

காவன் மீட்புக்கு உறுதுணையாக இருந்த அமெரிக்கப் பாடகி சீர், கம்போடியாவில் காவனை வரவேற்கச் சென்றுள்ளார். கம்போடியாவில் இன்று தரையிறங்கும் காவன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழப்போகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x