Published : 12 Oct 2015 05:58 PM
Last Updated : 12 Oct 2015 05:58 PM
சிரியாவில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவே ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் ஷியா முஸ்லிம்களுக்கும் சன்னி முஸ்லிம்களுக்கும் இடையே நீண்ட காலமாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. ஷியா பிரிவைச் சேர்ந்த பஷார் அல்-ஆசாத் அந்த நாட்டின் அதிபராக உள்ளார். அவருக்கு எதிராக சன்னி பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ். உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் போரிட்டு வருகின்றன.
அதிபர் ஆசாத்தை அமெரிக்கா நேரடியாக எதிர்த்து வருகிறது. அவரை பதவி விலகச் செய்ய ஐ.எஸ். தவிர இதர அமைப்புகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.
இந்நிலையில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யா களத்தில் குதித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிரியாவில் முகாமிட்ட ரஷ்ய போர் விமானங்கள் ஐ.எஸ். உள்ளிட்ட தீவிரவாதிகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதலை தொடங்கியுள்ளன. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: நாங்கள் நாடு பிடிக்க விரும்பவில்லை. வெளிநாட்டு இயற்கை வளங்களும் எங்களுக்கு தேவையில்லை. ரஷ்யா தன்னிறைவான நாடு.
சிரியாவில் நீண்டகாலமாக உள்நாட்டு குழப்பம் நீடிக்கிறது. அதிபர் ஆசாத்தின் ஆட்சி கலைந்தால் சிரியா முழுவதும் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுக்கு சென்றுவிடும். அதை தடுப்பது அவசியம்.
எனவே சிரியாவில் ஸ்திரமான ஆட்சியை ஏற்படுத்த அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யா போரிட்டு வருகிறது. மிதவாத எதிர்க்கட்சிகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதாக கூறுவது தவறு. ஐ.எஸ். உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராகவே நாங்கள் தாக்குதல் நடத்தி வருகிறோம்.
இதுவரை தரைவழி தாக்குதலில் ரஷ்யா ஈடுபடவில்லை. வான்வழி தாக்குதல் மட்டுமே நடத்தி வருகிறோம். சிரியா அரசின் வேண்டுகோளை ஏற்று சர்வதேச விதிகளுக்கு உட்பட்டே ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இதை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT