

அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா தனது சிறு வயது காலத்தில் இதிகாசங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதக் கதைகளைக் கேட்டு நேரத்தை செலவிட்டதாக சுயசரிதையில் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, “எ பிராமிஸ்ட் லாண்ட்” என்ற தலைப்பில் நினைவுக்குறிப்பு எழுதியுள்ளார். இந்த நூலில் உலக அளவில் தான் சந்தித்த அரசியல் கட்சித் தலைவர்கள், உலகத் தலைவர்கள் குறித்து விவரித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ஒபாமாவின் இளமைக்கால வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை, அரசியல் நிகழ்வுகள், அதிபராக இருந்தபோது நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகள் என 768 பக்கங்கள் கொண்ட நூலாக இரு பகுதிகளாக உருவாக்கப்பட்டு முதல் பகுதி இன்று வெளியிடப்பட உள்ளது.
அந்த நூல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் குறித்தும், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், அமெரிக்க அதிபராகப் போகும் ஜோ பைடன் ஆகியோர் குறித்தும் ஒபாமா கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்த நூலில் ஒபாமா தனது இளமைக் காலம் குறித்து பல்வேறு தகவல்களைத் தெரிவித்துள்ளார். அதில் இந்தியா குறித்து ஒபாமா குறிப்பிடுகையில் “ உலகின் மக்கள் தொகையில் ஆறில் பகுதி மக்கள் வாழும் நாடு, 2 ஆயிரத்துக்கும் மேலான தனித்துவமான இனக்குழுக்கள், 700க்கும் மேற்பட்ட மொழிகள் இருக்கும் நாடு.
நான் 2010-ம் ஆண்டு அதிபராக இந்தியாவுக்கு வருவதற்கு முன் இந்தியாவுக்கு சென்றதில்லை. ஆனால், எப்போதும் என் மனதில் இந்தியாவைப் பற்றி சிறப்பான உருவகம் இருந்தது.
என்னுடைய சிறுவயதில் நான் இந்தோனேசியாவில் வளர்ந்தேன். அப்போது இந்துக்களின் இதிகாசங்களான ராமாயணம் , மகாபாரதக் கதைகளைக் கேட்டுத்தான் வளர்ந்தேன்.
ஏனென்றால், எனக்கு கிழக்கு நாடுகளின் மதங்களை மிகவும் பிடிக்கும். என்னுடன் இந்தியாவைச் சேர்ந்த, பாகிஸ்தானைச் சேர்ந்த பல மாணவர்கள் படித்தார்கள், நண்பர்கள் இருந்தார்கள்.
அவர்கள்தான் எனக்கு பருப்பு, கீமா சமையல் செய்வதைப் பற்றி கற்றுக் கொடுத்தார்கள். இந்தி திரைப்படங்களை பார்க்கவும் அறிமுகப்படுத்தினார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.