Published : 13 Nov 2020 07:25 AM
Last Updated : 13 Nov 2020 07:25 AM
பிரிட்டனில் கரோனா வைரஸ் 2-வது அலை தொடங்கியிருப்பதால், நாள்தோறும் கரோனாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரையில்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 33 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரிட்டனில் கரோனா உயிரிழப்பு 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது மக்களிடையே பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே டிசம்பர் 2-ம் தேதிவரை பிரிட்டன் அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில், உயிரிழப்பு அதிகரித்தைத் தொடர்ந்து கெடுபிடிகளைக் கடுமையாக்கியுள்ளது.
வியாழக்கிழமை மட்டும் பிரிட்டனில் கரோனாவில் புதிதாக 33 ஆயிரத்து 470 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகினர். புதன்கிழமையன்று 10,520 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகினர்.
பிரிட்டனில் இதுவரை கரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏறக்குறைய 13 லட்சத்தை எட்டியுள்ளது. கரோனாவில் உயிரிழப்பு 50 ஆயிரத்து 928 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 563 பேர் கரோனாவில் உயிரிழந்தனர். புதன்கிழமை மட்டும் 595 பேர் உயிரிழந்தனர்.
கடந்த மே, ஜூன் மாதங்களில் ஏற்பட்ட உயிரிழப்பை நோக்கி பிரிட்டன் நகர்ந்து வருகிறது. மே மாதத்துக்குப் பின் கரோனாவில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பை புதன்கிழமை பிரிட்டன் சந்தித்தது.
இதன் மூலம் கரோனாவில் 50 ஆயிரத்துக்கும் மேல் உயிரிழப்பைச் சந்தித்த நாடுகளில் 5-வது இடத்தை பிரிட்டன் பிடித்துள்ளது. இதற்குமுன் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், மெக்சிகோ ஆகிய நாடுகள் மட்டுமே முதல் 4 இடங்களில் இருந்த நிலையில் 5-வதாக பிரிட்டன் சேர்ந்துள்ளது.
பிரிட்டனின் தேசிய சுகாதாரத்துறையின் இயக்குநர் மருத்துவப் பேராசிரியர் ஸ்டீபன் போவிஸ் கூறுகையில், “கடந்த 7 நாட்களில் கரோனா பரிசோதனை சராசரி என்பது 22,668 பேருக்கும் கீழாகவே இருக்கிறது. இந்தப் பரிசோதனை அளவுகளை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். அப்போதுதான் கரோனா பாதிப்பைக் குறைக்க முடியும்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே, பிரிட்டனில் மக்களுக்கு டிசம்பர் 2-ம் தேதிவரை பல்வேறு கட்டுப்பாடு தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதவிர வேல்ஸ் மாகாணத்திலும், வடக்கு அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகியவற்றிலும் 17 நாட்கள் லாக்டவுன் தனியாகப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டென்மார்க்கிலிருந்து பிரிட்டனுக்கு வரும் பயணிகளுக்கு 2 வாரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. டென்மார்க்கில் இருக்கும் பிரிட்டன் மக்கள் மட்டுமே பிரிட்டனுக்குள் வர வேண்டும். அவர்கள் வந்தாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு அனுமதியில்லை என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.
அதேசமயம் ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், லாவோஸ், ஐஸ்லாந்து, கம்போடியா, சிலி, பஹ்ரைன் ஆகிய நாடுகள் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT