Published : 09 Nov 2020 03:19 PM
Last Updated : 09 Nov 2020 03:19 PM
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தோல்வி அடைந்தவுடன், சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். கிண்டல்களுக்கும், வசைபாடுதலுக்கும் ஆளானார்.
இஸ்ரேல் நாட்டின் தலைநகர் ஜெருசலேம் நகராட்சி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில், அதிபர் ட்ரம்ப்பைக் கிண்டல் செய்து பதிவு வெளியிட்டு அதைச் சிறிது நேரத்தில் நீக்கிவிட்டது.
ஜெருசலேம் நகராட்சியின் பதிவில், “அதிபர் ட்ரம்ப் கவனத்துக்கு. தேர்தலில் தோற்றுவிட்டோம் எனக் கவலைப்படாதீர்கள். ஜெருசலேம் வந்துவிடுங்கள். ஏராளமான வேலைகள் காத்திருக்கின்றன. ஜெருசலேம் நகராட்சி ஏராளமான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி நாள்தோறும் வேலைவழங்கி வருகிறது.
உங்களுக்குத் தகுதியான வேலையைக் கொடுக்கிறோம். அமெரிக்காவை கிரேட்டாக மாற்றுவோம் என்பதுபோல், ஜெருசலேமை கிரேட்டாக (பெருமைக்குரியதாக) மாற்றுவோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.
அதிபர் ட்ரம்ப்பைக் கிண்டல் செய்து பதிவிடப்பட்ட இந்தக் கருத்தை ஜெருசலேம் நகராட்சி நிர்வாகம் விரைவாக நீக்கிவிட்டது என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ஜெருசலேம் நகராட்சியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “அதிபர் ட்ரம்ப்பைக் கிண்டல் செய்து பதிவிட்ட கருத்து தவிர்க்கப்பட வேண்டியது. இருப்பினும், அந்தத் தகவல் தெரிந்தவுடன் உடனடியாக பதிவை நீக்க உத்தரவிட்டோம்” என்றார்.
இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் நகரை அங்கீகரித்து கடந்த 2017-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலான அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்கவில்லை.
ஏனென்றால் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் ஆகிய 3 பிரிவினருக்கும் பொதுவான ஜெருசலேமை இஸ்ரேல் நாடு ஆக்கிரமித்ததை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்கவில்லை. ஆனால், அமெரிக்க அதிபராக இருக்கும் ட்ரம்ப் திடீரென தனது வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் செய்து ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிப்பதாக அறிவித்து, டெல்அவிவ் நகரில் இருந்து தூதரகத்தையும் மாற்றப்போகிறோம் என அறிவித்தார்.
ஜெருசலேம் நகரம் தொடர்பான பிரச்சினையில் பாலஸ்தீனமும், இஸ்ரேலும் பேசித் தீர்க்க வேண்டும் என்றும் அமெரிக்கா தலையிடக்கூடாது என்றும் உலக நாடுகள் அதிபர் ட்ரம்ப்பை எச்சரித்தன. ஆனால், இஸ்ரேல் நாட்டுக்குக் கொம்பு சீவிவிடும் வகையில் அதிபர் ட்ரம்ப் எடுத்த நடவடிக்கைதான் அவர் தோற்றபோது, ஜெருசலேம் மட்டுமல்லாமல் இஸ்ரேல் நாட்டின் பல்பேறு நகரங்களில் கொண்டாட்டங்கள் நடந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT