Published : 09 Nov 2020 03:07 PM
Last Updated : 09 Nov 2020 03:07 PM
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் வெற்றி பெற்றவுடன் அனைத்தும் முடிந்துவிடவில்லை. பதவியேற்பதற்கு முன் பல்வேறு நடவடிக்கைகள் இருக்கின்றன.
இன்னும் ஏறக்குறைய 50 நாட்களுக்கும் மேலாகப் பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்குப் பின்புதான் அமெரிக்க அதிபர் முறைப்படி பதவி ஏற்பார்.
அதிபர் தேர்தலில் 290 பிரதிநிதிகள் வாக்குகள் பெற்று ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன், துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார்கள். ஆனால், தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது எனக் கூறி அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். பல்வேறு மாகாண நீதிமன்றங்களில் குடியரசுக் கட்சி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தலில் ஜோ பைடன் வெற்றி உறுதியாகுமா, ட்ரம்ப் தொடர்ந்த வழக்குகள் எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்த சில எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.
ஆனால், அமெரிக்காவின் தேர்தலைப் பொறுத்தவரை 200 ஆண்டுகளாக சில பாரம்பரிய விஷயங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதிலிருந்து இன்னும் மாறவில்லை.
குறிப்பாக அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நவம்பர் மாதத்தின் முதல் திங்கள்கிழமையைத் தொடர்ந்து வரும் செவ்வாய்க்கிழமையில் நடத்தப்படுகிறது. ஏனென்றால், ஞாயிற்றுக்கிழமை மக்கள் தேவாலயங்களுக்குச் செல்வார்கள். புதன்கிழமை விவசாயிகளுக்குச் சந்தை நாள் என்பதால், செவ்வாய்க்கிழமைதான் நடத்தப்படும்.
ஏன் திங்கள்கிழமை நடத்தப்படாது என்றால், முன்பு போக்குவரத்து வசதியில்லாத காலங்களில் பண்ணைகளில் பணியாற்றும் மக்கள் வாக்களிக்க நகர்ப்புறங்களுக்கு வருவதற்கு ஒருநாள் தேவைப்படும் என்பதால், திங்கள்கிழமை பயணத்துக்காக ஒதுக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை நடத்தப்படுகிறது. இந்த நடைமுறை இந்த ஆண்டு தேர்தல்வரை தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்கத் தேர்தலில் 50 மாகாணங்களில் 538 வாக்காளர் பிரதிநிதிகள் வாக்குகளில் 270 பிரதிநிதிகள் வாக்குகள் பெற்றவரே அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.
அமெரிக்கத் தேர்தலில் மக்கள் நேரடியாக அதிபர் வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டார்கள். அவர்கள் தங்கள் மாகாணத்தின் வாக்காளர் பிரதிநிதிகளுக்குத்தான் வாக்களிப்பார்கள். அந்த வாக்காளர் பிரதிதிகள், தங்களைத் தேர்வு செய்த வாக்காளர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப அதிபர் வேட்பாளரைத் தேர்வு செய்வார்கள்.
வாக்காளர் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் விதத்தில் மாநிலங்களுக்கு ஏற்ப சட்டங்கள் வேறுபடுகின்றன. ஆனால், பொதுவாக ஒவ்வொரு கட்சியின் வேட்பாளருக்கான வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கட்சியின் மத்திய குழுவின் வாக்களிப்பால் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
டிசம்பர் 8-ம் தேதி
தேர்தல் நாள் முடிந்தபின், மாகாணங்கள் வாக்குகளை எண்ணி, தேர்தல் முடிவுகளை அறிவிக்கின்றன. ஒவ்வொரு மாகாணத்தின் கவர்னரும் தேர்தலில் வென்ற வாக்காளர் பிரதிநிதிக்குச் சான்று அளிப்பார். இந்தச் சான்றிதழில், வாக்காளர் பிரதிநிதியின் பெயர், அவர் பெற்ற வாக்குகள், வெற்றியா அல்லது தோல்வியா என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
இந்த நடைமுறைகள் அனைத்தும் டிசம்பர் 8-ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். எந்த மாகாணத்திலாவது தேர்தல் தொடர்பான பிரச்சினைகள் இருந்தாலும் டிசம்பர் 8-ம் தேதிக்குள் தீர்க்கப்பட்டு, அல்லது மறுவாக்கு எண்ணிக்கை கோரப்பட்டாலும் அது நடத்தப்பட்டு முடிவுகள் டிசம்பர் 8-ம் தேதிக்குள் அறிவிக்கப்பட வேண்டும்.
டிசம்பர் 14-ம் தேதி
டிசம்பர் 14-ம் தேதி வாக்காளர் பிரதிநிதிகள் அனைவரும் எந்த மாகாணத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்களோ அங்கு பதவியேற்க வேண்டும். அதன்பின் வாக்காளர் பிரதிநிதிகள் தங்கள் வாக்குச்சீட்டு மூலம் அதிபர், துணை அதிபரைத் தேர்ந்தெடுப்பார்கள். இந்த வாக்குகள் எண்ணப்பட்டு, வாக்காளர் பிரதிநிதிகள் அளித்த ஆவணங்கள் அனைத்தும் பல்வேறு அதிகாரிகளுக்கும் செனட்டின் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்படும்.
டிசம்பர் 23-ம் தேதி
டிசம்பர் 23-ம் தேதிக்குள் வாக்காளர் பிரதிநிதிகள் அளித்த ஆவணங்கள், சான்றிதழ்கள் அனைத்தும் அதிகாரிகளுக்கு கண்டிப்பாகச் சேர்க்கப்பட வேண்டும் அவ்வாறு சேராவிட்டால், அதற்குரிய மாற்றுச் சட்டங்கள் மூலம் முடிவு எடுக்கப்படும்.
2021, ஜனவரி 6-ம் தேதி
2021, ஜனவரி 6-ம் தேதி அமெரிக்காவின் பிரதிநிதிகள் மற்றும் செனட் அவை கூட்டப்பட்டு வாக்காளர்கள் பிரதிநிகளின் வாக்குகள் எண்ணப்படும். இதில் 270 பிரதிநிதிகள் வாக்குகள் அதற்கு அதற்கு அதிகமாகப் பெற்றவரே செனட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்தத் தேர்தல் முடிவுகளை துணை அதிபர் மைக் பென்ஸ் வெளியிடுவார்.
தேர்தல் முடிவை துணை அதிபர் அறிவித்தபின் ஏதேனும் மாற்றுக் கருத்து இருந்தால் அதுகுறித்து உறுப்பினர்கள் எழுத்து மூலம் தெரிவிக்கலாம். இதில் பிரதிநிதிகள் சபையிலிருந்தும், செனட்டிலிருந்து குறைந்தபட்சம் தலா ஒருவர் எழுத்து மூலம் எதிர்ப்புத் தெரிவிக்கலாம்.
அந்த எதிர்ப்புக் கருத்துக் குறித்து இரு அவைகளும் தனித்தனியாக அதிகபட்சமாக 2 மணி நேரம் வரை விவாதிக்கும். அதன்பின், அந்த எதிர்ப்புக் கடிதத்தை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்று முடிவு செய்யும். அதன்பின் அந்த முடிவுகளை மீண்டும் கூட்டுக் கூட்டத்தில் அறிவிப்பார்கள். இரு அவைகளிலும் அந்த எதிர்ப்புக் கடிதம் ஏற்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் அது நிராகரிக்கப்படும்.
ஒருவேளை எந்தவொரு அதிபர் வேட்பாளரும் குறைந்தது 270 வாக்காளர் பிரதிநிதிகள் வாக்குகளைப் பெறவில்லை என்றால், அரசியலமைப்பின் 12 ஆவது திருத்தத்தின் அடிப்படையில், நாடாளுமன்றம் இறுதி முடிவு எடுக்கும். தேவைப்பட்டால், பெரும்பான்மை வாக்களிப்பின் மூலம் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
2021, ஜனவரி 20-ம் தேதி
தேர்தல் தொடர்பான அனைத்துச் செயல்பாடுகளும் முடிந்து, 2021-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபர் பதவி ஏற்றுக்கொள்வார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT