Published : 09 Nov 2020 01:03 PM
Last Updated : 09 Nov 2020 01:03 PM
துருக்கி அதிபர் தய்யிப் எர்டோகன் கருத்துச் சுதந்திரத்திற்கு மேலும் கெடுபிடி விதிக்கும் வகையில் பிரபல சமூக ஊடக நிறுவனங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப், பெரிஸ்கோப், டிக்டாக் போன்ற தளங்களுக்கு 1.1 மில்லியன் யூரோ அளவிற்கு அபராதம் விதித்துள்ளார்.
எதற்குத் தெரியுமா?, மேலே குறிப்பிடப்பட்ட சமூகவலைதள நிறுவனங்கள் துருக்கி நாட்டிற்கென சிறப்பு பிரதிநிதிகளை நியமிக்கவில்லை என்ற காரணத்துக்காக.
கடந்த ஜூலை மாதம் துருக்கி நாட்டில் ஒரு டிஜிட்டல் மீடியா சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி, ஒரு மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்ட சமூக வலைதளங்கள் துருக்கியில் அலுவலகம் திறந்து குறைந்தபட்சம் ஒரேயொரு பிரதிநிதியையாவது நியமிக்க வேண்டும்.
குறிப்பிட்ட சமூக வலைதளத்தில் வெளியாக கருத்துச் சர்ச்சையை ஏற்படும் வகையில் அமைந்தால் அது தொடர்பான சட்டப் பிரச்சினைகளை எதிர்கொள்ள ஏதுவாக இந்தச் சட்டம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறாக பிரதிநிதியை நியமிக்காத நிறுவனத்தின் மீது 1.1 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கவும் சட்டத்தில் வழிவகை உள்ளது.
மேலும், துருக்கி அரசாங்கம் அபத்தமானது எனக் கருதும் கருத்துகளை சம்பந்தப்பட்ட நிறுவனம் 48 மணி நேரத்துக்குள் நீக்க வேண்டும். அதை ஏற்க மறுத்தால் மேலும் 3.3 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்படும். அடுத்த 30 நாட்கள் வரை சர்ச்சைக் கருத்தின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அந்த தளங்களுக்கு வரும் விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்படும். மேலும் தொடர்ந்தால் இணைய வேகத்திற்கான பேண்ட்வித் 50% முதல் 90% வரை குறைக்கப்படும்.
இத்தகைய கெடுபிடிகளைக் கொண்ட சட்டம் அக்டோபர் 1-ல் இருந்து நடைமுறைக்கு வந்தது.
நாட்டில் சைபர் குற்றங்களைக் குறைக்க இந்தச் சட்டம் அவசியமென்றும், மக்கள் ஒருவொருக்கொருவர் வீண் பழிகளை சுமத்துவதை இச்சட்டம் தடுக்கும் என்று அதிபர் எர்டோகன் தெரிவித்தார். ஆனால், எதிர்க்கட்சிகளும் மனித உரிமைகள் அமைப்பும் எர்டோகன் தன் மீதான விமர்சனங்களைத் தடுக்கவே இவ்வாறாக செதிருப்பதாக விமர்சிக்கின்றன.
ட்விட்டரின் ஓர் அறிக்கையில், சர்வதேச அளவில் துருக்கி நாட்டிடமிருந்தே அதிகளவில் ட்விட்டர் தளத்தில் பதியப்பட்ட கருத்துகளை அகற்றக் கோரிக்கை வைக்கப்படிருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியின் கெடுபிடி டிஜிட்டல் சட்டத்துக்கு ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற எந்தவொரு பிரபல சமூகவலைதளமும் இணங்கவில்லை. ரஷ்யாவின் விகே (VK) என்ற சமூக வலைதளம் மட்டுமே இதற்கு ஒப்புக்கொண்டு ஒரு பிரதிநிதியை நியமித்துள்ளது.
இந்நிலையில், துருக்கியின் இந்த கெடுபிடியால் சர்வதேச இணைய நிறுவனங்கள் துருக்கி சந்தையை விட்டு வெளியேறும் அபாயமிருப்பதாக எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT