Published : 21 Oct 2015 10:15 AM
Last Updated : 21 Oct 2015 10:15 AM
கனடா நாடாளுமன்றத் தேர்தலில் லிபரல் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. அந்த கட்சியின் தலைவர் ஜஸ்டின் ட்ருடோ நாட்டின் புதிய பிரதமர் ஆகிறார்.
கனடா நாடாளுமன்றத்தில் மொத்தம் 338 இடங்கள் உள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. அந்த நாட்டில் லிபரல், கன்சர்வேட்டிவ், நியூடெமாக்ரடிக், பிளாக் கியூபெகோயிஸ், கிரீன் ஆகிய கட்சிகள் உள்ளன.
இதில் லிபரல், கன்சர்வேட்டிவ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுவது வழக்கம். இந்த தேர்தலிலும் இருகட்சிகளுக்கும் இடையே பலப்பரீட்சை நடை பெற்றது.
பிரதமரும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவருமான ஸ்டீபன் ஹார்பரும் லிபரல் கட்சித் தலைவர் ஜஸ்டின் ட்ருடோவும் சுமார் 78 நாட்கள் சூறாவளி பிரச்சாரம் செய் தனர். வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில் லிபரல் கட்சி 184 இடங்களைக் கைப்பற்றிய அபார வெற்றி பெற்றது. கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 99 இடங்கள் மட்டுமே கிடைத்தன. நியூடெமாகரடிக் கட்சி 44 இடங்களிலும் பிளாக் கியூபெகோயிஸ் கட்சி 10 இடங்களிலும் கிரீன் கட்சி ஓரிடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
அந்த நாட்டில் ஆட்சியமைக்க 170 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அதைவிட கூடுதலாக 14 இடங்களை லிபரல் கட்சி பெற்றுள்ளது. இதையடுத்து அந்த கட்சியின் தலைவர் ஜஸ்டின் ட்ருடோ (43) நாட்டின் புதிய பிரதமராகப் பதவியேற்கிறார்.
தேர்தல் வெற்றி குறித்து அவர் கூறியதாவது: மக்களின் பிரச்சி னைகளை நாங்கள் செவிமடுத்துக் கேட்டோம். அவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப தேர்தல் அறிக்கையை தயாரித்தோம். அதனால்தான் வெற்றி கிட்டியுள்ளது என்று தெரிவித்தார்.
பதவி விலகிய பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் கடந்த 10 ஆண்டுகள் கனடா பிரதமராக இருந்தார். புதிய பிரதமர் ஜஸ்டினின் தந்தை பியாரே கனடாவின் முன்னாள் பிரதமர் ஆவார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT