Published : 08 Nov 2020 10:55 AM
Last Updated : 08 Nov 2020 10:55 AM
அமெரிக்காவில் அதிகரித்துவரும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முதல் பணியாக புதிய மருத்துவ வல்லுர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு திங்கள்கிழமை அமைக்கப்படும் என்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் மக்களுக்கு உறுதியளித்தார்.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் அதன் பிறப்பிடமான சீனாவை விட, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில்தான் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை அமெரிக்காவில் கரோனா வைரஸால் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.43 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் கரோனா வைரஸ் 2-வது கட்ட அலை பரவியதுபோன்று, தற்போது நாள்தோறும் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாள்தோறும் ஏறக்குறைய ஒரு லட்சத்துக்கும் குறைவில்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட செனட்டர் கமலா ஹாரிஸ் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்தத் தேர்தல் வெற்றிக்குப் பின் அதிபராகப் பதவி ஏற்க இருக்கும் ஜோ பைடனும், துணை அதிபராகப் பதவி ஏற்க இருக்கும் கமலா ஹாரிஸும் மக்களுக்கு வில்மிங்டனில் உள்ள டெலாவேர் நகரில் சனிக்கிழமை இரவு உரையாற்றினர்.
அதிபராகப் பதவி ஏற்க இருக்கும் ஜோ பைடன் கரோனா வைரஸ் குறித்து மக்களிடம் பேசுகையில், “நான் அமெரிக்க மக்களுக்கு உறுதியளிப்பது என்னவென்றால், என்னுடைய முதல் பணி, கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தி, அதிலிருந்து மக்களைக் காப்பதாகும். இதற்காக திங்கள்கிழமை புதிய மருத்துவ வல்லுநர்கள், தொற்றுநோய் தடுப்பு வல்லுநர்கள் கொண்ட ஆலோசகர்கள் குழு அமைக்கப்படும். அதில் யார் இடம் பெறுவார்கள் என்பதும் அன்று அறிவிக்கப்படும்.
கரோனா வைரஸால் அமெரிக்காவில் இதுவரை 2.40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துவிட்டார்கள். தொற்றுநோயைத் தடுக்க புதிதான அடிப்படை அறிவியல் திட்டங்களை உருவாக்க வேண்டும். அதுமட்டும்தான் நாம் நமது வாழ்க்கையைத் திரும்பப் பெற வழியாகும்.
நாங்கள் புதிதாக அமைக்கும் மருத்துவ ஆலோசகர்கள் குழு கரோனா பரவலைத் தடுப்பதற்கான திட்டத்தைத் தயாரிக்கும். 2021ஆம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதியிலிருந்து அந்தத் திட்டம் செயல்படத் தொடங்கும். எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியாது.
அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தன் ஆட்சியில் அமைக்கப்பட்ட மருத்துவ வல்லுநர்கள் குழுவின் அறிவுரைகளையும் கேட்கவில்லை, வைரஸ் பரவலைக் தடுக்கவும் இல்லை” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT